ADDED : ஆக 24, 2026 02:14 AM

கார்ப்பரேட் பாண்டு முதலீடுகளில் சிறு முதலீட்டாளர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், தவறான விளம்பரங்களை தடுக்கவும் செபி திட்டமிட்டு உள்ளது.
சிறிய நகரங்கள் வரை பாண்டு முதலீடுகளை கொண்டு சேர்க்க நிலையான வினியோகஸ்தர் அமைப்பை உருவாக்குவதுடன், அனைத்து ஆர்டர்களும் செபியால் அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் வாயிலாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என செபி தெரிவித்துள்ளது. மேலும், விற்பனை ஊக்கத்தொகையாக பொருட்களையோ சலுகைகளையோ வழங்குவதற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இத்துடன் விளம்பரங்களில் பாண்டு வெளியீட்டாளர் பெயர், கடன் மதிப்பீடு, முதிர்வுகால வருவாய் மற்றும் நிலையான வருமானம் என்பது உத்தரவாதமான வருமானம் அல்ல என்பது போன்ற கட்டாய எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்ற கடுமையான விதிகளும் செபியால் முன்மொழியப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க செப்டம்பர் 11ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
