பிசினஸ் கிரெடிட் கார்டு: தேர்ந்தெடுப்பது எப்படி?
பிசினஸ் கிரெடிட் கார்டு: தேர்ந்தெடுப்பது எப்படி?
ADDED : டிச 26, 2025 03:30 AM

சந்தையில் ஏகப்பட்ட கிரெடிட் கார்டுகள் கிடைக்கின்றன. இவற்றில் உங்களுக்கு ஏற்றது எது என்பதைத் தேர்ந்தெடுப்பதே ஒரு கலை.
நீங்கள் ஒரு தொழிலதிபராகவோ, சுய தொழில் செய்பவராகவோ இருந்தால், மாதாமாதம் எவ்வளவு தொகை செலவிடுகிறீர்கள் என பாருங்கள். வரவு - செலவுகள் அதிகம் இருந்தால், பிசினஸ் கிரெடிட் கார்டுகள் நல்ல சாய்ஸ்.
இதற்கான சில டிப்ஸ்:
எது அதிகம்?:
சரக்கு கொள்முதல், வர்த்தகப் பயணம், விளம்பரங்கள் செய்வது, அன்றாட அலுவலக செலவுகள் உள்ளிட்டவற்றில் எந்த செலவுகள் உங்கள் விஷயத்தில் அதிகம் என்று பாருங்கள்.
அதற்கேற்ற கார்டை பரிசீலிக்கலாம் எடுத்துக்காட்டாக பயண டிக்கெட் முன்பதிவு, ஹோட்டல் முன்பதிவு ஆகியவை அதிகம் என்றால், பயணத்துக்கான சலுகைகள் தரும் கார்டை யோசிக்கலாம்.
ரிவார்டு பாயின்ட்: பிசினஸ் கார்டுகளில் நீங்கள் செலவழிக்கும் தொகைக்கேற்ப ரிவார்டு பாயின்டுகள் தரப்படும்.
அவற்றைப் பயன்படுத்தி, அடுத்தமுறை செலவு செய்யலாம். சில கார்டுகளில் கேஷ் பேக் வசதியும் உண்டு. அவற்றை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு, எளிமையான முறையில் சலுகை தரும் கார்டு எது என்று பாருங்கள்.
செலவு வரம்பு: ஒரு கிரெடிட் கார்டில் எவ்வளவு செலவழிக்க முடியும் என்பது உங்களது பொருளாதார தகுதி, கார்டின் வகையைப் பொறுத்து மாறுபடும். கார்டில் அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் வரை வட்டியில்லாக் கடனாகக் கிடைக்கிறது என்று பாருங்கள்.
அதிகக் கட்டுப்பாடு இல்லாமல் வட்டியில்லாக் கடன் கிடைக்கும்போது, அது தொழிலுக்கான நடைமுறை மூலதனமாக கை கொடுக்கும். அதேபோல, பாக்கித் தொகையை செலுத்துவது எளிமையான முறையில் இருப்பதும் முக்கியம்.
கட்டணம், அபராதம்: கிரெடிட் கார்டுகள் பலவற்றுக்கும் ஆண்டு கட்டணம், புதுப்பிப்பு கட்டணம், மறைமுக கட்டணங்கள் உண்டு. இவை இல்லாத கார்டுகளும் உண்டு. எனவே, இச்செலவுகள் குறைவான கார்டுகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
சேவை எப்படி?: மாதாந்திர கிரெடிட் கார்டு அறிக்கை எளிமையாக உள்ளதா; அதில் பிழைகள் இருந்தால் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையம் கைகொடுக்குமா என்பதைப் பாருங்கள்.
தனிப்பட்ட செலவு: இந்த கார்டில் செய்யக்கூடாது. அதேபோல, தனிப்பட்ட கார்டில் வணிகம் சார்ந்த செலவுகளையும் செய்யக்கூடாது. இவற்றையெல்லாம் பரிசீலித்து, உரிய நேரத்தில் பாக்கித் தொகையை செலுத்தி, நிதி ஒழுங்குடன் நீங்கள் நடப்பவராக இருந்தால், தாராளமாக பிசினஸ் கிரடிட் கார்டு வாங்குங்கள்.
