
தங்கம் மற்றும் வெள்ளி
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி, தினமும் ஒரு வரலாற்று உச்சத்தை எட்டி, வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்க அரசின் செலவினங்கள் தொடர்பான பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு, இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது. ஆனால், இதற்கு மாற்று அல்லது நீட்டிப்பு நிதி ஒதுக்கீடு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால், அமெரிக்க அரசாங்கம் தற்காலிகமாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது, சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவுக்கு காரணமாக அமைந்தது. டாலரின் மதிப்பு சரிவால், உலோகங்களின் விலை உயர ஆரம்பித்துள்ளது.
இதற்கு முன்பாக, அமெரிக்க அரசாங்கம் கடைசியாக 2018 இறுதியிலிருந்து 2019 தொடக்கம் வரை, 35 நாட்கள் பகுதியளவில் மூடப்பட்டது. அந்த மூடுதலால் கிட்டத்தட்ட 11 பில்லியன் டாலர் அளவிற்கு உள்நாட்டு மொத்த உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகியது நினைவிருக்கக்கூடும்.
கச்சா எண்ணெய்
கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை, பேரல் ஒன்றுக்கு 4.50 அமெரிக்க டாலர் உயர்ந்து, 64.80 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. ஜூன் மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதிகப்படியான வார அளவிலான விலை உயர்வு இதுவே ஆகும். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவி வரும் வான்வழி தாக்குதல் காரணமாக, சிறிது விலையேற்றம் காணப்பட்டது.
கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் உறுப்பு நாடுகள், வருங்காலங்களில் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் வகுத்துள்ளது. இதனால் சந்தையில், தேவைக்கு அதிகமான எண்ணெய் வரவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பால், விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஈரான் நாட்டின் வடக்கு பகுதியான குருதிஸ்தான் மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் ஏற்றுமதி, தற்போது மீண்டும் தொடங்கியது . தினசரி 1.80-1.90 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய், துருக்கியின் செய்ஹான் துறைமுகத்திற்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.