
வெள்ளி
சர்வதேச சந்தையில், வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் (31.10 கிராம்) 50 அமெரிக்க டாலர்களை கடந்து, வரலாற்று உச்ச விலையாக 51.20 அமெரிக்க டாலர்களை எட்டியது. தங்கத்துடன் ஒப்பிடும்போது, வெள்ளி விலையில் பொதுவாகவே அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படும். 2011 ஏப்ரலில், ஒரு அவுன்ஸ் விலை, 49.54 டாலர் என்ற உச்சம் பெற்றது, பின் படிப்படியாகச் சரிந்து, 2020 மார்ச்சில், குறைந்தபட்ச விலையாக, 15.43 டாலர் என்ற நிலையை எட்டியது. தற்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக வலுவான நிலையில் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில், வரும் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ள கூட்டத்தில், வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பால் அமெரிக்க நாணயத்தின் மதிப்பில் சரிவு ஏற்பட்டது. இது வெள்ளி விலை உயரக் காரணமாக அமைந்தது. வளர்ந்து வரும் தொழில் துறைகளாலும் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது.
தற்போது, வெள்ளி இ.டி.எப்., அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இந்தியாவில், 12 நிறுவனங்கள் இந்த வகை முதலீடுகளை வழங்குகின்றன. இந்நிறுவனங்கள், தங்களுடைய முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப, சந்தையில் வெள்ளியை கொள்முதல் செய்து வாலட்டுகளில் சேமிப்பர். அடிப்படையில் வெள்ளி விலையில் ஏற்படும் மாற்றங்கள், இந்த வகை முதலீட்டிலும் பிரதிபலிக்கும் என்பதை முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.