ADDED : மே 31, 2026 01:50 AM

இண்டிகோ
மேற்காசிய போர் காரணமாக, தங்கள் விமானங்களின் ஐந்தில் ஒரு இருக்கை காலியாக இருந்ததாகவும், தினமும் கிட்டத்தட்ட 160 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் மோதல் மட்டுமின்றி, உக்ரைன் போரும் இப்பாதிப்பை ஏற்படுத்தியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி.,
வந்தே பாரத் மற்றும் பிற பிரீமியம் ரயில்கள் வாயிலாக கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ள போதிலும், அதனுடன் தொடர்புடைய ஜி.எஸ்.டி., வரி செலவும் உயர்ந்துள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் வரிச்சுமை காரணமாக, உணவு வினியோக பிரிவின் ஒட்டுமொத்த லாப வரம்பும் கணிசமாக குறைந்ததாக கூறியுள்ளது.
ஹிந்துஸ்தான் காப்பர்
கனிம உற்பத்தி நிறுவனமான லோஹமுடன் இணைந்து, குஜராத்தில் உள்ள தாமிர ஆலையை மீண்டும் இயக்க, ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்துக்கு அதன் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுக்காக இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சுஸ்லான் எனர்ஜி
கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்து, அதன் வாயிலாக நிறுவனத்தின் நிகர மதிப்பை உயர்த்தி காட்டியதாக, சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்கு செபி 28.60 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தவறான தகவல்கள் வாயிலாக முதலீட்டாளர்களை ஏமாற்றியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
டெல்
உலகளாவிய ஏ.ஐ., உள்கட்டமைப்பில் ஏ.ஐ., சர்வர்களுக்கான தேவை அதிகரித்தது மற்றும் விலை உயர்வு காரணமாக, டெல் நிறுவனத்தின் பங்குகள் 33 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இதன் வாயிலாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 6.46 லட்சம் கோடி ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர்.
சர்குலேட் கேபிட்டல்
பன்னாட்டு சுற்றுச்சூழல் நல முதலீட்டு நிறுவனமான 'சர்குலேட் கேபிட்டல்', இந்தியாவின் மறுசுழற்சி நிறுவனங்களில் முதலீடு செய்ய கிட்டத்தட்ட 1,425 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. நம் நாட்டில் முதல்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளால் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, இந்நிறுவனம் இந்த முடிவு எடுத்துள்ளது.
