ADDED : அக் 28, 2025 11:00 PM

செம்பு 17 மாத உச்சம்
ச ர்வதேச சந்தையில், செம்பு விலை, கடந்த திங்கள் அன்று 17 மாத புதிய உச்சமாக, ஒரு டன் 11,095 அமெரிக்க டாலர்கள் என்ற நிலையை எட்டியது. கடந்த மூன்று மாதங்களில், ஒரு டன்னுக்கு கிட்டத்தட்ட 1,500 டாலர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு, உலகின் மிகப்பெரிய செம்பு உற்பத்தி நாடான இந்தோனேஷியாவில் உள்ள 'கிராஸ்பர்க்' சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தால் உற்பத்தி பாதிப்புக்குள்ளானது காரணமாகும். இதனால், சந்தையில் கனிமம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவியது.
இந்த சுரங்கமானது, கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 8.15 லட்சம் மெட்ரிக் டன் செம்பை உற்பத்தி செய்தது. இது, உலகளாவிய மொத்த உற்பத்தியில் 4 சதவீதம். காங்கோ, சிலி ஆகிய நாடுகளில் உள்ள சுரங்கங்களிலும், சராசரியைவிட உற்பத்தி குறைவாகவே இருந்ததும், சந்தையில் விலை உயரக் காரணமாக அமைந்தது.
மேலும், அமெரிக்கா - சீனா இடையேயான புதிய பேச்சு வாயிலாக, வர்த்தகப் போரில் சுமுக முடிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
செம்பின் விலை, நடப்பாண்டில் இதுவரை கிட்டத்தட்ட 35 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு டன் செம்பின் விலை 10,920 அமெரிக்க டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
கே. முருகேஷ் குமார்
துணைத்தலைவர்,சாய்ஸ் புரோக்கிங் பிரைவேட் லிமிடெட்

