UPDATED : மார் 27, 2026 01:22 AM
ADDED : மார் 27, 2026 01:20 AM

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், பிப்ரவரியில் கிரெடிட் கார்டு செலவுகள் கிட்டத்தட்ட 11 சதவீதம் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் 1.99 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், பிப்ரவரியில் 1.78 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளன. பிப்ரவரி மாதத்தில் நாட்களின் எண்ணிக்கை குறைவு என்பதும் ஒரு முக்கிய காரணம்.
![]() |
அதே நேரத்தில், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் செலவுகள் ஆறு சதவீதம் அதிகரித்துள்ளன. ஆண்டு ஒப்பீட்டு அளவிலான வளர்ச்சி, கடந்த சில மாதங்களாக எட்டு சதவீதமாக இருந்த நிலையில், கடந்த மாதம் ஆறு சதவீதமாக குறைந்துள்ளது.
செலவுகள் குறைந்துள்ளபோதிலும், வங்கிகள் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருதாகவும்; அதே வேளையில், கார்டு பயன்பாடு மீதான பிடியை இறுக்கி வருவதாகவும் இத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சமீப காலமாக, வெகுமதிகள் குறைப்பு, செலவு அடிப்படையிலான சலுகைகள் போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், வங்கிகளின் செலவுகளை குறைத்து லாபத்தை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கம் என அவர்கள் தெரிவித்தனர்.

