டிமேட் கணக்குகள் 15% உயர்வு 2026ல் என்ன எதிர்பார்க்கலாம்?
டிமேட் கணக்குகள் 15% உயர்வு 2026ல் என்ன எதிர்பார்க்கலாம்?
ADDED : டிச 28, 2025 01:40 AM

நடப்பாண்டில் மந்தநிலைக்கு இடையிலும், மொத்த டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை, 15 சதவீதம் உயர்ந்து கிட்டத்தட்ட 21.28 கோடியாக அதிகரித்துள்ளது, டிபாசிட்டர்கள் தரவுகளின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
ஒழுங்குமுறை மாற்றங்கள், உலகளாவிய புவிசார் அரசியல் நிகழ்வுகள் மற்றும் அதிகப்படியான சந்தை ஏற்ற இறக்கங்கள் நிறைந்த இந்த ஆண்டில், பங்குச் சந்தையில் நேரடி பங்கேற்பு எதிர்பார்த்தபடியே குறைந்துள்ளது. டிபாசிட்டரிகள் தரவுகளின்படி, 2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரை, புதிய டிமேட் கணக்குகள் துவங்குவது, 20 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது.
புதிதாக சந்தைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர், 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள், சம்பாதிக்க துவங்கும் போதிலிருந்தே முதலீடு செய்ய ஆரம்பிக்கின்றனர்.
அசுர வளர்ச்சியில் உள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உள்ளூர் மொழி தகவல்களால், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து முதலீட்டாளர்கள் பெருமளவில் இணைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
2026ல் என்ன?
*புத்தாண்டில் வெறும் கணக்குகளின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்காமல், முதலீட்டாளர்கள் ஸ்மார்ட்டாக செயல்படுவது அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்
* குறுகியகால லாபத்திற்காக சந்தையை அணுகாமல், நீண்டகால அடிப்படையில் முதலீட்டாளர்கள் மாறக்கூடும் என கூறுகின்றனர்
* ஐ.பி.ஓ., வெளியிடும் நிறுவனங்கள் வழங்கும் லாபத்தைப் பொறுத்து, புதிய கணக்குகள் துவங்கும் வேகம் இருக்கும் எனவும் துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

