
ஏ.யு., வங்கியின் யு.பி.ஐ., கிரெடிட் வசதி
ஏ .யு., ஸ்மால் பைனான்ஸ் வங்கி, யு.பி.ஐ., முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய உதவும் 'ஏ.யு., காஸ்மோ' கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 'கிவி' என்ற நிதி தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த கார்டை அறிமுகம் செய்துள்ளது.
இந்த கிரெடிட் கார்டுக்கு, ஆண்டு சந்தா கட்டணமோ, புதுப்பித்தல் கட்டணமோ கிடையாது. முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதை பயன்படுத்துவதற்கு பல்வேறு வெகுமதிகளும் கிடைக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும், 400 - 5,000 ரூபாய் வரை பெட்ரோல், டீசல் நிரப்பினால் இந்த கார்டை பயன்படுத்தி, 1 சதவீத கூடுதல் கட்டணம் தள்ளுபடி பெறலாம். ஒரு மாத பில்லிங் சுழற்சியில் அதிகபட்சமாக 100 ரூபாய் வரை மட்டுமே தள்ளுபடி கிடைக்கும்.
'ஆகாசா ஏர் கட்டண தள்ளுபடி
ப ண்டிகை காலத்தை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ம் தேதி வரை, வெளிநாட்டு விமான டிக்கெட் விலையில் 25 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஆகாசா ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகாசா ஏர் இணையதளம் அல்லது மொபைல் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, 'FESTIVE' என்ற குறியீட்டை பயன்படுத்தி, வெளிநாட்டு பயணங்களுக்கான டிக்கெட்டுகளின் அடிப்படை விலையில், 25 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். மேலும் பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் வரும் அக்டோபர் 2ம் தேதி வரை இது செல்லுபடியாகும். ஆனால், செப்டம்பர் 25க்கு பிறகே பயணிக்கலாம். மூன்று நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
பிடித்த இருக்கையைத் தேர்ந்தெடுக்க, 50 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். விமானத்தில் வழங்கப்படும் உணவுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். விரைவாக செக் - இன் செய்ய, வழக்கமான கட்டணத்தைவிடக் குறைவான விலையில், அதாவது 599 ரூபாய்க்கு இந்த சேவையைப் பெறலாம். முன்பதிவு செய்யும்போதே, கூடுதல் லக்கேஜ்ஜுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.