தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ வளர்ச்சியில் வேகம் காட்டும் 'ஐச்சர் மோட்டார்ஸ்'

 வளர்ச்சியில் வேகம் காட்டும் 'ஐச்சர் மோட்டார்ஸ்'

 வளர்ச்சியில் வேகம் காட்டும் 'ஐச்சர் மோட்டார்ஸ்'


ADDED : மார் 15, 2026 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 01:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான 'ஐச்சர் மோட்டார்ஸ்' இரண்டு முக்கிய தொழில்களை ஒரே நிறுவனத்தின் கீழ் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அதில் முக்கியமானது 'ராயல் என்பீல்டு'. ஒரு சாதாரண வாகன தயாரிப்பு நிறுவனமாக மட்டும் அல்லாமல், ஒரு லைப்ஸ்டைல் பிராண்டாகவும் இந்நிறுவனம் உருவெடுத்துள்ளது.

குறிப்பாக, 250 சி.சி., முதல் 750 சி.சி., வரையிலான நடுத்தர மற்றும் பிரீமியம் மோட்டார் சைக்கிள் சந்தையில், ராயல் என்பீல்டு உலகளவில் வலுவான ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் மட்டும் 350 சி.சி., பிரிவில், கிட்டத்தட்ட 95 சதவீத சந்தை பங்கையும்; 500 - 650 சி.சி., பிரிவில் 97 சதவீத சந்தை பங்கையும் கொண்டுள்ளது. மேலும் பிரேசில், தாய்லாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட பல சர்வதேச சந்தைகளில் விற்பனை அதிகரித்து வரு வதால், ஏற்றுமதி வளர்ச்சியும் வலுவடைந்துள்ளது.

இந்நிறுவனத்தின் இரண்டாவது முக்கிய வணிகம் 'வி.இ., கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ்'. இது 'வால்வோ' குழுமம் மற்றும் ஐச்சர் குழுமம் ஆகியவை இணைந்து உருவாக்கிய கூட்டு நிறுவனம்.

இந்நிறுவனம், இந்தியாவில் ஐச்சர் மற்றும் வால்வோ பிராண்டுகளின் கீழ் டிரக்குகள் மற்றும் பேருந்துகளை தயாரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலகுரக மற்றும் நடுத்தர ரக டிரக் சந்தையில் வலுவாக உள்ளது.

தற்போது அனைத்து வணிக வாகன பிரிவுகளிலும் போட்டியிடும் அளவுக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக, 'ஐச்சர் ப்ரோ 6000' மற்றும் 'ப்ரோ 8000' தொடர் வாகனங்கள் வாயிலாக, கனரக வாகன சந்தையிலும் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது.

நிதி செயல்திறன் அடிப்படையில் பார்க்கும்போது, 2025 - 26 நிதியாண்டில், ஐச்சர் மோட்டார்ஸ் 23,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பாதையில் உள்ளது. அதேபோல், வரிக்கு பிந்தைய லாபம் 5,500 கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வாகனத்துக்கு கிடைக்கும் லாப அளவில், இந்தியாவின் மிக லாபகரமான வாகன நிறுவனங்களில் ஒன்றாக, இந்நிறுவனம் உருவெடுத்துள்ளது.

நிறுவனத்தின் பின்னணி: ஐச்சர் குழுமம் 1948ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் டிராக்டர்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இந்நிறுவனம், 1980ல் வணிக வாகன துறையில் நுழைந்தது. 1982ல் பொது நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. பின்னர், நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்த ராயல் என்பீல்டு பிராண்டை, 1994ம் ஆண்டு கையகப்படுத்தியது.

இந்த பிராண்டின் உண்மையான மாற்றத்தை உருவாக்கியவர் சித்தார்த்த லால். 2000ம் ஆண்டு மேலாண் இயக்குநராக பொறுப்பேற்ற அவர், லாபமில்லாத தொழில்களை விட்டு விலகி, ராயல் என்பீல்டை, பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்டாக மாற்றும் முயற்சியில் முழு கவனம் செலுத்தினார்.

அதன் விளைவாக, ராயல் என்பீல்டு இன்று உலகளவில் தனித்துவமான பிராண்டாக வளர்ந்துள்ளது. இதன்காரணமாக, ஐச்சர் மோட்டார்ஸ் இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதலீட்டாளர்களுக்கு அதிக செல்வத்தை உருவாக்கிய நிறுவனங்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது.

கடந்த 2024 - 25 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், நிறுவனத்தின் செயல்திறன் மிகவும் வலுவாக இருந்தது. ராயல் என்பீல்டு விற்பனை 3.25 லட்சம் யூனிட்டுகளை தாண்டி, ஆண்டு அடிப்படையில் 21 சதவீதம் உயர்ந்தது. 250 - 750 சி.சி., பிரிவில், சந்தை பங்கு கிட்டத்தட்ட 89 சதவீதமாக இருந்தது.

அதேபோல் ஏற்றுமதியும் 21 சதவீதம் உயர்ந்தது. மறுபுறம், வி.இ., கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் நிறுவனத்தின் விற்பனை 24 சதவீதம் அதிகரித்து, 26,086 யூனிட்டுகளாக உயர்ந்தது.

எபிட்டா 652 கோடி ரூபாயாகவும், வரிக்கு பிந்தைய லாபம் 338 கோடி ரூபாயாகவும் உயர்ந்தது. 5 - 18 டன் இலகுரக மற்றும் நடுத்தர ரக டிரக் சந்தையில், ஐச்சர் கிட்டத்தட்ட 35 சதவீத சந்தை பங்குடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. கனரக டிரக் பிரிவிலும் விற்பனை அதிகரித்து வருகிறது.

எதிர்கால திட்டம்: ஐச்சர் மோட்டார்ஸ், தனது முக்கிய சந்தை பிரிவில் அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இப்போது அந்த ஆதிக்கத்தை புதிய சந்தைகளுக்கும், புதிய தொழில்நுட்பங்களுக்கும் விரிவுபடுத்துவதற்காக தீவிரமாக முதலீடு செய்து வருகிறது.

ராயல் என்பீல்டு தனது பாரம்பரிய 350 சி.சி., மாடல்களை தாண்டி, புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 'ே ஷ ர்பா' இன்ஜின் கொண்டு உருவாக்கப்பட்ட 'ஹிமாலயன் 450, கொரில்லா 450 பைக்குகள்' போன்ற புதிய மாடல்கள் உலகளாவிய சந்தையில் போட்டியை அதிகரித்துள்ளன.

சர்வதேச சந்தைகளிலும் உற்பத்தி மற்றும் விற்பனை வலையமைப்பை நிறுவனம் விரிவுபடுத்தி வருகிறது.

மின்சார வாகனங்களிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. ராயல் என்பீல்டு மின்சார மோட்டார் சைக்கிளை உருவாக்கி வரும் நிலையில், வி.இ., கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் ஏற்கனவே மின்சார பேருந்துகள் மற்றும் 'ப்ரோ எக்ஸ்' போன்ற மின்சார சிறிய டிரக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ராயல் என்பீல்டு வாகனங்களுக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவையை பூர்த்தி செய்ய, செய்யாறு தொழிற்சாலையில் 958 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி திறன் விரிவாக்கமும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் வாயிலாக, ஆண்டு உற்பத்தி திறன் 14.6 லட்சத்திலிருந்து, 20 லட்சம் வாகனங்களாக உயரும்.

ஒரு பிராண்டை ஆரம்ப நிலையிலிருந்து மிகச்சிறந்த நிலைக்கு உயர்த்த முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ள ஐச்சர் மோட்டார்ஸ், இப்போது தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எழுதத் தயாராகி வருகிறது.

இதற்காக புதிய தொழில்நுட்பத் தளங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் சர்வதேச சந்தைகள் ஆகியவற்றில் நிறுவனம் பெரும் முதலீடுகளை செய்து வருகிறது.

பொறுப்பு துறப்பு

இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us