உடன்பிறந்தோருக்கும் இனி குடும்ப மருத்துவ காப்பீடு
உடன்பிறந்தோருக்கும் இனி குடும்ப மருத்துவ காப்பீடு
ADDED : நவ 21, 2025 11:43 PM

குடும்ப மருத்துவ காப்பீடுகளில், சகோதர - சகோதரிகள், திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் துணை ஆகியோரையும் சேர்க்க, காப்பீடு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக , துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
நம் நாட்டில் மாறிவரும் குடும்ப அமைப்பிற்கு ஏற்ப, மருத்துவ காப்பீடு திட்டங்களை, நிறுவனங்கள் விரிவுபடுத்தி வருகின்றன. அந்த வகையில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஒரே குடும்ப மருத்துவ காப்பீடில் கணவர் அல்லது மனைவி, குழந்தைகள், பெற்றோர் மற்றும் மாமியார், மாமனார் ஆகியோரை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும். தற்போது புதிய விதிகளின் கீழ், உடன்பிறந்தவர்களையும் ஒரே குடும்ப மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் சேர்க்கலாம். அதேபோல, 'லிவ் -இன் பார்ட்னர்கள்' எனும், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் துணையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
நவீன காலத்தில், உடன்பிறந்தவர்கள் ஒன்றாக வாழ்வது அல்லது, லிவ்- இன் உறவுகள் அதிகமாகிவிட்டதோடு, இவர்கள் செலவுகள் மற்றும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்கின்றனர். எனவே, பொதுமக்கள் தங்கள் நிஜ வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் காப்பீடு திட்டங்களை தேர்வு செய்ய, இந்த மாற்றம் உதவுகிறது.
இது, நீண்டகால அடிப்படையில் மருத்துவ செலவுகளை குறைக்கவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் மாற்றும். இந்த புதிய, விரிவுபடுத்தப்பட்ட திட்டங்கள், ஏற்கனவே உள்ள காப்பீடு திட்டங்களின் அனைத்து அடிப்படைப் பலன்களையும் தக்கவைத்துக் கொள்ளும். புதிய நபர்களை சேர்ப்பதால், காப்பீடு செலவு அல்லது கவரேஜ் தரம் மாறாது.
'ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு' போன்ற முன்னணி நிறுவனங்கள், இந்த வாய்ப்பை தங்கள் திட்டங்களில் அறிமுகப்படுத்தியுள்ளன. விரைவில் பிற காப்பீட்டு நிறுவனங்களும் இதைப் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது ஒரே குடும்ப மருத்துவ காப்பீடில், கணவர் அல்லது மனைவி, குழந்தைகள், பெற்றோர் மற்றும் மாமியார், மாமனார் ஆகியோரை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும். புதிய விதிகளின் கீழ், உடன்பிறந்தவர்களையும்; திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் துணையையும் சேர்த்துக் கொள்ளலாம்

