தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : கட்டமைப்பு துறையில் அபார வளர்ச்சி பெறும் அதானி என்டர்பிரைசஸ்

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : கட்டமைப்பு துறையில் அபார வளர்ச்சி பெறும் அதானி என்டர்பிரைசஸ்

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : கட்டமைப்பு துறையில் அபார வளர்ச்சி பெறும் அதானி என்டர்பிரைசஸ்


UPDATED : ஜூன் 07, 2026 01:46 AM

ADDED : ஜூன் 07, 2026 01:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 01:46 AM ADDED : ஜூன் 07, 2026 01:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சுரங்கத்தொழில், விமான நிலையங்கள், சாலைகள், ரயில், மெட்ரோ, நீர் மேலாண்மை, தரவு மையங்கள், சூரிய சக்தி உதிரிபாகங்கள் தயாரிப்பு, வேளாண்மை மற்றும் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறது.

நிலக்கரி வர்த்தகத்தில் தொடங்கி, புதிய தொழில்களை வளர்க்கும் நிறுவனமாக இப்போது மாறியுள்ளது. அதிக முதலீடு தேவைப்படும் தொழில்களை தங்களின் கணக்கு வழக்குகளுக்குள் வளர்த்து, பின்னர் தனியாக பிரித்து பங்கு சந்தையில் பட்டியலிடும் உத்தியை இந்நிறுவனம் பின்பற்றுகிறது.

'அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் காஸ், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி வில்மர்' ஆகிய அனைத்தும் முதலில் ஏ.இ.எல்., கீழ் உருவாக்கப்பட்டு, பின்னர் தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்டவையாகும்.

Image 1585029
இதனால், 2016 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் இக்குழுமத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

தற்போது ஏ.இ.எல்., நிறுவனம் 8 செயல்பாட்டு விமான நிலையங்கள், முந்த்ராவில் செம்பு உருக்காலை மற்றும் 'அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ்' கீழ் ஒருங்கிணைந்த பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டு உள்ளது.

மேலும், 'எட்ஜ்கனெக்ஸ்' கூட்டு முயற்சியில் 210 மெகா வாட் தரவு மையம், ஒன்பது சாலை திட்டங்கள், முந்த்ராவில் பி.வி.சி., திட்டம் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இதனுடன், 'எம்ப்ரேயர் மற்றும் லியோனார்ட்' நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் வாயிலாக விண்வெளி மற்றும் பாதுகாப்பு தளத்தையும் தன் வசம் கொண்டுள்ளது.

வளர்ச்சி இயந்திரங்கள்

இந்நிறுவனத்தின் மூன்று பெரிய உள்கட்டமைப்பு தொழில்கள் தற்போது நல்ல வருவாயை ஈட்டத் தொடங்கி, கணக்கு வழக்குகளில் பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளது, முதலீட்டிற்கான முக்கிய காரணம்.

முதலாவதாக, விமான நிலைய தொழில் இந்நிறுவனத்தின் மிக முக்கிய எபிட்டா லாப துறையாக வளர்ந்துள்ளது.

இது, இந்தியாவின் ஒட்டுமொத்த பயணியர் போக்குவரத்தில் 23 சதவீதத்தையும், சரக்கு போக்குவரத்தில் 29 சதவீதத்தையும் கையாள்கிறது. 2026ம் நிதியாண்டில் இத்துறை வாயிலாக 13,081 கோடி ரூபாய் வருவாயும், 5,394 கோடி ரூபாய் எபிட்டா லாபமும் கிடைத்துள்ளது. இவ்வாண்டு பயணியரின் எண்ணிக்கை 9.53 கோடியாக உள்ளது.

நவி மும்பை விமான நிலையம்: இதன் சொத்து மதிப்பு 20,000 கோடி ரூபாய் என்றும், லாப வரம்பு 12 முதல் 14 சதவீதம் வரை இருக்கும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, ஆண்டு எபிட்டா லாபத்தில் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கூடுதலாக சேர்க்கும். இந்த வணிகத்தை வரும் 2027ம் ஆண்டுக்குள் பங்கு சந்தையில் பட்டியலிட இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

கட்ச் காப்பர்: இன்னும் 2 - 3 மாதங்களில் முழு உற்பத்தி திறனை எட்டும். இதன் உற்பத்தி திறன் 70 - 80 சதவீதமாக நிலைபெறும்போது, 2,800 முதல் 3,100 கோடி ரூபாய் வரை கூடுதல் எபிட்டா லாபம் கிடைக்கும்.

இந்தியாவில் செம்புக்கான தேவை ஆண்டுக்கு 20 சதவீதத்துக்கும் மேல் வளர்வதால், நுகர்வுக்காக 44 சதவீதம் (5 லட்சம் டன்னுக்கும் அதிகம்) சுத்திகரிக்கப்பட்ட செம்பு இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் பைப், கட்டுமானம் மற்றும் பேக்கேஜிங் துறைகளின் தேவையால் பி.வி.சி., நுகர்வு ஆண்டுக்கு 8 - 9 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு, முந்த்ராவில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட பி.வி.சி., தொழிற்சாலையை உருவாக்கி வருகிறது. இதன் முக்கிய பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும்; இதற்காக ஏற்கனவே 9,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

பசுமை ஹைட்ரஜன்: ஏ .என்.ஐ.எல்., நிறுவனம் கவ்டா மற்றும் முந்த்ராவில் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பசுமை ஹைட்ரஜன் வளாகத்தை உருவாக்குகிறது. கடலோர பகுதியிலேயே சோலார் பேனல்கள், காற்றாலை டர்பன்கள், எலக்ட்ரோலைசர்கள் போன்ற அனைத்தையும் நேரடியாக தயாரிப்பதால், இறக்குமதி செலவை விட பாதியளவிலேயே பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும் என இந்நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

இத்திட்டத்தின் முழுமையான லாபம், அதிகாரப்பூர்வ லாப ந ஷ் ட்ட கணக்கில் பிரதிபலிக்க இன்னும் பல ஆண்டுகளாகும்.

மூலதன முதலீடு

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மூலதன செலவு இலக்கு, 2026 நிதியாண்டில் 36,000 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2027 நிதியாண்டில் 40,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த நீண்டகால கடன் 78,000 கோடி ரூபாய்.

இதில், 16,000 கோடி ரூபாய் பங்குதாரர்களிடம் இருந்து பெற்ற கடன் என்பதால், வெளி நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய நீண்டகால கடன் 62,000 கோடி ரூபாயாக மட்டுமே உள்ளது.

அண்மையில் முடிந்த 24,930.30 கோடி ரூபாய் மதிப்பிலான 'ரைட்ஸ் இஷ்யூ' அடுத்தகட்ட முதலீட்டு திட்டங்களை கையாளும் வசதியை தந்துள்ளது. நிறுவனர்களின் பங்கு 74 சதவீதமாக உள்ளது. இந்த ரைட்ஸ் இஷ்யூவிலும் தங்களின் பங்குகளை அவர்கள் முழுமையாக வாங்கியுள்ளது, நிறுவனத்தின் எதிர்காலம் மீதான அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை உணர்த்துகிறது.

சவால்கள்

அடுத்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளவிருக்கும் மூலதன முதலீடுகள் மிக அதிகம் என்பதால், தற்போதைய லாபகரமான தொழில்களின் உள்நாட்டு நிதி மட்டுமே இதற்கு போதாது.

இதனால், இந்நிறுவனம் தொடர்ந்து புதிய கடன்களை வாங்குவதையும், கூடுதல் பங்குகளை வெளியிடுவதையும் நம்பியே இருக்க வேண்டியிருக்கும். இதற்கான வட்டி மற்றும் இதர செலவுகள், நிறுவன பங்குகளின் எதிர்கால மதிப்பை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

மேலும், அதானி குழுமத்தின் கார்ப்பரேட் ஆளுமை மற்றும் நிர்வாக நடைமுறைகள் இன்னும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஏதேனும் புதிய சிக்கல்கள் எழுந்தால், அது குழுமத்தின் கடன் சந்தை மதிப்பை பாதித்து, கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும் அபாயம் உள்ளது.

வளர்ச்சிக்கான காரணிகள்

முதலீட்டாளர்களை பொறுத்தவரை, நிறுவனம் சரியான தொழில்களை தான் தேர்ந்தெடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அத்தொழில்கள் லாபம் தரும் வரை எவ்வளவு காலம் பொறுத்திருக்க வேண்டும் என்பது தான் கேள்வி.

இந்நிறுவனத்தின் அனைத்து தொழில்களுமே, இந்தியாவின் பொருளாதார இலக்குகள் மற்றும் இறக்குமதியை குறைக்கும் அரசின் கொள்கைகளுக்கு ஏற்பவே அமைந்துள்ளன.

திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதில் இக்குழுமத்திற்கு நல்ல வரலாற்று சான்று உள்ளது. சமீபத்திய ரைட்ஸ் இஷ்யூ வாயிலாக திரட்டப்பட்ட நிதியும் அடுத்தகட்ட முதலீட்டு செலவுகளுக்கு நன்மையை தந்துள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்த அறிக்கை, முதலீட்டு பரிந்துரையல்ல. நாங்களோ, எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம்; வாங்கி இருக்கலாம் அல்லது விற்று இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us