ஃபண்டமென்டல் அனாலிசிஸ்: பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்: பிடி இறுகுமா, தளருமா?
ஃபண்டமென்டல் அனாலிசிஸ்: பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்: பிடி இறுகுமா, தளருமா?
UPDATED : செப் 06, 2026 03:34 AM
ADDED : செப் 06, 2026 02:53 AM

நாட்டின் முன்னணி பசை உற்பத்தி நிறுவனமான 'பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்', 1959ல் பல்வந்த்ராய் கல்யாண்ஜி பரேக் என்பவரால் தொடங்கப்பட்டது. மரவேலை பட்டறைகளுக்கே நேரில் சென்று தயாரிப்புகளை விளக்கும் உத்தி வாயிலாக தன் 'பெவிகால்' பிராண்டை பிரபலமாக்கியது. 1993ல் இதன் சந்தை மதிப்பு 60 கோடி ரூபாயாக இருந்தது, தற்போது 1.70 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பட்டியலிடப்பட்டு முப்பதாண்டுகளாகியும் சந்தையில் நிதி திரட்டாமல், சொந்த வருவாய் மற்றும் குறைந்த கடனை கொண்டே வளர்ந்துள்ளது இந்நிறுவனம். இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ், 30க்கும் மேற்பட்ட பிராண்டுகள், 820 தயாரிப்புகளை வைத்துள்ளது.
![]() |
இதன் நுகர்வோர் பிரிவு 2025- - 26 நிதியாண்டின் மொத்த வருவாயில், 82 சதவீத பங்களிப்பை வழங்கி உள்ளது. இப்பிரிவில் 'பெவிகால், பெவிகுவிக், எம் - சீல், அரால்டைட்' உள்ளிட்ட பசைகள், 'டாக்டர் பிக்ஸிட், ராப்' போன்ற கட்டுமான ரசாயனங்கள் அகிய தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்நிறுவனத்தின் பி2பி பிரிவு 18 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இதில் கையகப்படுத்துதல் வாயிலாக பல முன்னணி பிராண்டுகள் இணைக்கப்பட்டு உள்ளன. நுகர்வோர் பசை சந்தையில் பெவிகால் 60--65 சதவீதப் பங்கையும், 'எபாக்சி' பிரிவில் 'அரால்டைட்' 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கையும், நீர் கசிவு தடுப்புப் பிரிவில் 70 சதவீதப் பங்கையும் பிடிலைட் வைத்துள்ளது. பெவிகுவிக் 65 சதவீத வீடுகளை சென்றடைந்து, ஆண்டுக்கு 150 கோடி பரிவர்த்தனைகளுடன்; 30 லட்சத்திற்கும் அதிகமான கடைகளில் விற்பனையாகிறது.
வினியோக கட்டமைப்பு
பிடிலைட் நிறுவனம் 42,000 நகரங்களில் 5,700க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் மற்றும் 3.80 லட்சம் விற்பனையாளர்களுடன் இயங்குகிறது. இதில் முன்னணி 10 வினியோகஸ்தர்களின் பங்களிப்பு என்பது 3 சதவீதம் மட்டுமே என்பதால், வினியோக குவிப்பு அபாயம் இல்லை. ஆண்டுக்கு 2,000 புதிய கிராமங்களை இணைப்பதன் வாயிலாக, கடந்த 13 காலாண்டுகளாக, கிராமப்புற சந்தை வளர்ச்சி நகர்ப்புறத்தை விட 1.5 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது.
நிதியாண்டு செயல்பாடு
பிடிலைட் நிறுவனத்தின் வருவாய் 11.10 சதவீதம் உயர்ந்து 14,601 கோடி ரூபாயை எட்டியுள்ளதுடன், விற்பனை அளவு வளர்ச்சியும் 11.10 சதவீதமாக அதிகரித்துள்ளது; முக்கிய மூலப்பொருளான 'வினைல் அசிட்டேட் மோனோமர்' விலை டன்னுக்கு 861 டாலராக குறைந்ததால், எபிட்டா லாபம் 3,519 கோடி ரூபாயாக உயர்ந்து, அதன் வரம்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக 24.10 சதவீதமாக விரிவடைந்துள்ளது.
வரிக்கு பிந்தைய லாபம் 17.9 சதவீதம் வளர்ச்சியடைந்து 2,471 கோடி ரூபாயாகவும், செயல்பாட்டு பணப்புழக்கம் 2,828 கோடி ரூபாயாகவும் உள்ளது. 593 கோடி ரூபாய் மட்டுமே மூலதன செலவு செய்து, 22.4 சதவீத ஈக்விட்டி மீதான வருவாயுடன் இந்நிறுவனம் கடனற்ற பலமான நிதிநிலையை தக்கவைத்து கொண்டுள்ளது.
தயாரிப்பில் மாற்றம்
பிடிலைட் நிறுவனம் தனது பாரம்பரிய பிரிவின் வருவாய் பங்களிப்பை 80 சதவீதத்திலிருந்து 52 சதவீதமாக குறைத்து, பிற வளர்ந்து வரும் பிரிவுகளுடன் 50:50 என்ற சமநிலையை எட்ட இலக்கு வைத்துள்ளது. 23,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய கட்டுமான ரசாயன சந்தை 2029க்குள் 14 சதவீத வளர்ச்சியுடன் 35,000 கோடி ரூபாயை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது நீர்கசிவு தடுப்பு பிரிவுக்கு உதவுவதாக இருக்கும்.
புதிய பிரிவுகள்
டீலர்களின் கோரிக்கையை ஏற்று 'ஹைஷா' பிராண்டு வாயிலாக உட்புற அலங்கார பெயின்ட் துறையில் பிடிலைட் இறங்கியுள்ளது. ஸ்பெயினின் குரூபோ பூமா கூட்டுடன் உருவாக்கப்பட்ட 'யூனோபின்' ஸ்ப்ரே வகை பூச்சு, 4 அடுக்கு நடைமுறைகளை ஒரே படிநிலையாக குறைத்து 2-3 நாட்களில் உலர்ந்து 15 ஆண்டுகள் வரை உழைக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
மேலும் 'ஜோவாட், கால்டெக், ஐ.சி.ஏ., குரேரே' போன்ற சர்வதேச கூட்டணிகள் வாயிலாக வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ள இந்நிறுவனம், 500 கோடி ரூபாய் முதலீட்டின் வாயிலாக அடுத்த ஐந்து ஆண்டுகளில், எலக்ட்ரானிக் பசைகள் பிரிவில் 1,000 கோடி ரூபாய் வரை வர்த்தகம் ஈட்ட இலக்கு வைத்துள்ளது.
போட்டி சூழல் மரப் பிசின் சந்தையில், ஜோதி ரெசின்ஸின் 'யூரோ 7000' மற்றும் ஜூபிலன்ட்டின் 'ஜீவன்ஜோர்' பிராண்டுகளின் தீவிரக் கடன் சலுகைப் போட்டியால், பிடிலைட்டின் சந்தை பங்கு 72 சதவீதத்திலிருந்து 65-67 சதவீதமாக குறைந்துள்ளது. ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் போன்ற நிறுவனங்கள் நீர்கசிவு தடுப்பு மற்றும் டைல்ஸ் பதிப்பதற்கான பசைகள் சந்தைக்குள் நுழைகின்றன.
எதிர்கால கணிப்பு
நடப்பு 2027 நிதியாண்டில் எபிட்டா லாப வரம்பு 20 -24 சதவீதம் என்ற இலக்கின் மத்திய அல்லது மேல் பகுதியை எட்டும் எனவும், விற்பனை வளர்ச்சியை இரட்டை இலக்கத்துக்கு எட்ட திட்டமிட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விலையேற்றத்திற்கு பிறகும் நிறுவனம் தனது வழக்கமான விலை நிர்ணய அதிகாரத்தை தக்கவைத்து, விற்பனையை பாதுகாக்குமா என்பதும், முதிர்ச்சியடைந்த பழைய தயாரிப்புகளின் வேகக்குறைவை புதிய வளர்ச்சி தயாரிப்புகள் ஈடுசெய்யுமா என்பதும் முதலீட்டாளர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
பொறுப்பு துறப்பு
இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.
நிதியாண்டு / அளவீடு மார்ச்-20 2021 2022 2023 2024 2025 2026 மொத்த வருவாய் (ரூ.கோடியில்) 7,294 7,293 9,921 11,799 12,383 13,140 14,601 செயல்பாட்டு லாபம் (ரூ.கோடியில்) 1,576 1,681 1,847 1,984 2,707 3,013 3,519 செயல்பாட்டு லாப வரம்பு (%) 21.60 23 18.60 16.80 21.90 22.90 24.10 வரிக்கு பிந்தைய நிகர லாபம் (ரூ.கோடியில்) 1,122 1,126 1,207 1,289 1,747 2,096 2,471 நிகர சொத்துக்கள் மீதான வருவாய் (%) 24.00 19.30 18.30 17.30 20.30 21.10 22.40 டிவிடெண்ட் யீல்டு (%) 0.50 0.50 0.40 0.50 0.50 0.70 0.90

