பண்டமென்டல் அனாலிசிஸ்: நெஸ்லே இந்தியா: நுகர்பொருட்கள் துறையின் துாண்
பண்டமென்டல் அனாலிசிஸ்: நெஸ்லே இந்தியா: நுகர்பொருட்கள் துறையின் துாண்
UPDATED : டிச 28, 2025 01:43 AM
ADDED : டிச 28, 2025 01:20 AM

சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் 'நெஸ்லே எஸ்.ஏ.,' நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் 'நெஸ்லே இந்தியா லிமிடெட்.' கடந்த 1912ம் ஆண்டு, நெஸ்லே எஸ்.ஏ., நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைந்தது.
ஆனால், 1959ம் ஆண்டே நெஸ்லே இந்தியா நிறுவனம் தனி நிறுவனமாக துவங்கப்பட்டது. 'மில்க்மெய்ட், நெஸ்கபே, நெஸ்லே ஏ பிளஸ், செர்லாக், மேகி, கிட்கேட், மஞ்ச், போலோ, மில்கிபார்' போன்றவை நெஸ்லே இந்தியாவின் பிராண்டுகளாகும்.
வணிக பிரிவுகள்
பால் தயாரிப்புகள், ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள், சமையலுக்கான உதவிப் பொருட்கள் மற்றும் தயார் நிலையிலுள்ள உணவுகள், பவுடர் மற்றும் திரவ நிலையில் உள்ள பானங்கள், மிட்டாய் வகைகள் ஆகிய வணிகப் பிரிவுகளை கொண்டிருக்கின்றது.
![]() |
வருமானத்தில் பிரிவுகளின் பங்களிப்பு (2024- -- 25 நிதியாண்டு)
* பால் தயாரிப்புகள், ஊட்டச்சத்து - 38%
*தயார் நிலையிலுள்ள உணவுகள், சமையலுக்கான உதவிப் பொருட்கள் - 31%
* மிட்டாய் வகை - 17%
* பொடி மற்றும் திரவ பானங்கள் - 14%
பால் தயாரிப்புகள்
இப்பிரிவின் விற்பனையில், இந்தியாவில் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தயாரிப்பான 'செர்லாக்' மிக வலுவான இடத்தில் உள்ளது.
இந்த வணிகப்பிரிவின் வருமானத்தில் 60 சதவீதம், குழந்தைகளுக்கான பால் பொருட்கள் வாயிலாக வருகிறது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக, இப்பிரிவில் விற்பனை வளர்ச்சி குறைந்து வருகிறது.
இதற்குக் காரணம் 'தாய்மார்கள் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது இத்தகைய பால் கலவையை வழங்க வேண்டாம்' என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருவதால், விற்பனை வளர்ச்சி குறைந்துள்ளது.
இதற்காக சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை அல்லாத செர்லாக் தானிய மாவையும், 'செரிக்ரோ' ஊட்டச்சத்து தானிய உணவையும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
தயார் நிலையிலுள்ள உணவுகள் மற்றும் சமையல் உதவிப் பொருட்கள் இந்த வணிகப் பிரிவின் மொத்த வருமானத்தில் 'மேகி நுாடுல்ஸ்' வாயிலாக 80 சதவீத வருமானம் வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு, மேகி நுாடுல்ஸில் ஈய பொருள் இருப்பதாக கூறி, தடை விதிக்கப்பட்டது.
![]() |
இதன் காரணமாக 80 சதவீத சந்தையை ஒரே இரவில் இழந்தது. இருப்பினும் அதிலிருந்து மீண்டு, 2024--25ம் நிதியாண்டில், 60 சதவீத சந்தையை மீட்டுள்ளது. 2024--25ம் நிதியாண்டில், இப்பிரிவு ஒற்றை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது.
மிட்டாய் வகைகள்
மிக வலுவான வணிகப்பிரிவாக மிட்டாய் வகைகள் உள்ளன. கிட்கேட், மஞ்ச் சாக்லேட்டுகள் இந்த சந்தையில் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் உள்ளன. கடந்த நிதியாண்டில், கிட்கேட் விற்பனை அதிகமாக இருந்ததால், இந்த வணிகப் பிரிவு ஒற்றை இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
கிராமப்புறங்களில் வினியோகத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதனால் வளர்ச்சி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
திரவ பானங்கள்
இன்ஸ்டன்ட் காபி பிரிவில் 55 சதவீத சந்தை பங்களிப்புடன் 'நெஸ்கபே' முன்னணியில் உள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தப் பிரிவு இரண்டு இலக்க வளர்ச்சி பெற்றுள்ளது.
காலாண்டு முடிவுகள்
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருமான வளர்ச்சி 10.60 சதவீதமாக உயர்வைக் கண்டு உள்ளது. உள்நாட்டு வருமானம் 10.80 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டை காட்டிலும், நடப்பு நிதியாண்டு இரண்டா-வது காலாண்டில், இ.பி.ஐ.டி.டி.ஏ., மார்ஜின் 100 புள்ளிகள் குறைந்து 21.90 சதவீதமாக உள்ளது. மூலப் பொருட்கள் விலை உயர்வால், மொத்த மார்ஜினும் 230 புள்ளிகள் குறைந்துள்ளது. மொத்த மார்ஜின் மெதுவாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முயற்சிகள்
செல்லப் பிராணிகள் நலம்:
சர்வதேச சந்தையில் நெஸ்லே நிறுவனத்தின் 'புரினா' பிராண்டு 2-வது பெரிய பிராண்டாக உள்ளது. இந்த பிராண்டுக்கு இந்தியாவில் பெரும் வளர்ச்சி வாய்ப்பு உள்ளது.
நெஸ்பிரஸ்ஸோ - பிரீமியம் காபி பிரிவில் முன்னோடியாக இருக்கும் 'நெஸ்பிரஸ்ஸோ' புதுடில்லியில் முதல் விற்பனையகத்தை துவங்கி உள்ளது.
டாக்டர் ரெட்டிஸ் கூட்டு
ஊட்டச்சத்து பொருட்களை விரிவுப்படுத்து வதற்காக 'நெஸ்லே ஹெல்த் சயின்ன்ஸ்' நிறுவனமும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.
வினியோகம்:
நெஸ்லே நிறுவனத்துக்கு 10,000க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் மற்றும் மறுவினியோகஸ்தர்கள் உள்ளனர். மேலும் 28,240 வினியோக முனையம் வாயிலாக 53 லட்சம் சில்லரை கடைகளுக்கு இதன் தயாரிப்புகள் சென்று சேருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில், “ஆர்அர்பன்” திட்டம் மூலம் கிராமப்புறத்தையும் நகர்ப்புறத்தையும் ஒங்கிணைக்கும் வினியோக முயற்சியை நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
ஸ்மார்ட் ஸ்டோர்கள் மட்டுமின்றி, வாரந்தோறும் நடைபெறும் கிராம சந்தைகளில் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
மூலதன ஒதுக்கீடு
தேவை அதிகரிக்கும் முன்பே முதலீடுகளை செய்வதே நெஸ்லே நிறுவனத்தின் உத்தியாக இருந்து வருகிறது. 2020ம் ஆண்டிலிருந்து 2025ம் ஆண்டு வரை, 6,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது.
இதுவரை 5,700 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் நிறைவு பெற்றுள்ளன. வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 800 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருக்கிறது. மேலும், தயார் நிலையில் உள்ள உணவுப் பிரிவுக்காக, ஒடிசா மாநிலத்தில் 950 கோடி ரூபாயில் புதிய தொழிற்சாலை ஒன்றை நிறுவ உள்ளது.
டிவிடெண்டுகள்
நெஸ்லே நிறுவனம் தனது லாபத்தின் சுமார் 80 சதவீதத்தை டிவிடெண்டாக வழங்குகிறது.
நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக மனிஷ் திவாரி பொறுப்பேற்றுள்ளார். இவர் அமேசான் இந்தியா நிறுவனத்தில் 8 ஆண்டுகளும் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தில் 20 ஆண்டுகளும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இவர் தொடர்ந்து வால்யூம் (அளவு) அடிப்படையிலான வளர்ச்சி மீது கவனம் செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
குழந்தை ஊட்டச்சத்து பிரிவில் வால்யூம் தொடர்பான சவால்கள் இருந்தாலும், மேகி நுாடுல்ஸ், நெஸ்கபே இன்ஸ்டன்ட் காபி மற்றும் கிட்கேட் போன்ற வலுவான பிராண்டுகளில் பெற்றுள்ள ஆதிக்கத்தினால், இந்நிறுவனம் நுகர்பொருட்கள் துறையில் நிலைத்தன்மையும் சந்தைத் தலைமைத்துவமும் கொண்ட முக்கிய துாணாக தொடர்ந்து விளங்குகிறது.
பொறுப்பு அறிக்கை
இந்த அறிக்கை, முதலீட்டு பரிந்துரை அல்ல; நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.



