தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஃபண்டமென்டல் அனாலிசிஸ் :  இந்திய மின்சக்தியின் முதுகெலும்பு என்.டி.பி.சி.,

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் :  இந்திய மின்சக்தியின் முதுகெலும்பு என்.டி.பி.சி.,

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் :  இந்திய மின்சக்தியின் முதுகெலும்பு என்.டி.பி.சி.,


ADDED : ஜன 25, 2026 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 01:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் மிகப்பெரிய அனல்மின் நிறுவனமான, 'நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன்' நாட்டின் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில், முதன்மை பொதுத்துறை நிறுவனமாகத் திகழ்கிறது. தற்போது 79 ஜிகாவாட் ஒருங்கிணைந்த உற்பத்தித் திறனைக் கொண்டுள்ள இந்நிறுவனம், அதில் 69 ஜிகாவாட் அனல் மின்சாரம் வாயிலாகவும், எஞ்சியவற்றை நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாகவும் உற்பத்தி செய்கிறது.

கடந்த 2008- - 13 காலகட்டத்தில், இந்திய மின்சாரத் துறை, திட்டமிடப்படாத விரிவாக்கங்களால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தது. குறிப்பாக, மின் வினியோக நிறுவனங்களின் நிதிநிலை மிக மோசமாக இருந்தது. ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ஒரு ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதால், மின்சாரம் வாங்கக்கூட அவர்களிடம் நிதி இல்லை.

ஆனால், தற்போது 'உதய்' மற்றும் 'ஆர்.டி.எஸ்.எஸ்' போன்ற அரசுத் திட்டங்களால், இந்த இழப்பு 0.15- - 0.25 பைசாவாகக் குறைந்து, நிலைமை மேம்பட்டுள்ளது.

தெளிவான வளர்ச்சி உத்தி



என்.டி.பி.சி., தனது எதிர்காலத்துக்காக இருமுனை உத்திகளைக் கொண்டுள்ளது.

அனல்மின் விரிவாக்கம்: கிட்டத்தட்ட 26 ஜிகாவாட் கூடுதல் திறனை அறிவித்துள்ளது. இதில், 17 ஜிகாவாட் கட்டுமானத்தில் உள்ளது. நிலம் மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களைத் தவிர்க்க, ஏற்கனவே உள்ள ஆலை வளாகங்களிலேயே விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: தனது துணை நிறுவனமான, 'என்.டி.பி.சி. கிரீன்' வாயிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், பல பத்து ஜிகாவாட் திறனை எட்ட இலக்கு வைத்துள்ளது.

6.8% என்ற குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறும் வசதி இருப்பதால், தனியார் நிறுவனங்களை விட, ஏலங்களில் வலுவாகப் போட்டியிடும் திறன் இதற்கு உண்டு.

சேமிப்பு மற்றும் பாதுகாப்பு


புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த, 'நீரேற்று மின் சேமிப்பு' துறையில், 36 ஜிகாவாட் திறனை நிறுவனம் கொண்டுள்ளது.

இது, 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் மின் தேவை அதிகமுள்ள நேரங்களில், அதிக லாபத்துக்கு மின்சாரத் தை விற்பதற்கு உதவும்.

மேலும், நிறுவனத்தின் வருவாய், பெரும்பாலும், அரசு விதிமுறைக்கு உட்பட்ட, 'ஒழுங்குபடுத்தப்பட்ட பங்கு மூலதனத்தை' சார்ந்துள்ளதால், சந்தை ஏற்ற இறக்கங்களால், வருவாய் பாதிக்கப்படாமல், நிலையான பணப்புழக்கம் உறுதி செய்யப்படுகிறது.

எதிர்கொள்ளும் சவால்கள்


திட்டங்களைச் செயல்படுத்துவதே என்.டி.பி.சி.,-க்கு இருக்கும் மிகப்பெரிய சவால். கடந்த 18 ஆண்டுகளில் 11 முறை தனது இலக்குகளைத் தவறவிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல், வனத்துறை அனுமதி மற்றும் ஒப்பந்ததாரர் சார்ந்த தாமதங்கள் இதற்குக் காரணங்களாக உள்ளன.

மேலும், எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் ஒரு சவாலாக இருந்தாலும், 'ஒழுங்குபடுத்தப்பட்ட வணிக மாதிரி' வாயிலாக இந்த கூடுதல் செலவுகளை, நுகர்வோரிடம் வசூலித்துக்கொள்ளும் வசதி, நிறுவனத்துக்கு ஒரு பாதுகாப்பை வழங்குகிறது என்றே சொல்லவேண்டும் .

போட்டி மற்றும் வாய்ப்புகள்


தனியார் துறையில், 'அதானி பவர், ஜே.எஸ்.டபுள்யு., டாடா பவர்' போன்ற நிறுவனங்கள், வலுவான போட்டியாளர்களாக இருந்தாலும், என்.டி.பி.சி., யின் பிரமாண்ட அளவு மற்றும் உறுதியான எரிபொருள் இணைப்புகள், அதனை மிகக் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்றுகின்றன.

2026 -- 30 காலகட்டத்தில், மின் தேவை ஆண்டுக்கு 7.5-8% அதிகரித்தால், அனல்மின் நிறுவனங்களுக்குச் சாதகமான சூழல் உருவாகும்.

எதிர்கால பார்வை


என்.டி.பி.சி., ஒரு 'பாதுகாப்பான பயன்பாட்டுப் பங்காக' கருதப்படுகிறது. நிலையான பணப்புழக்கத்தை விரும்பும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு, என்.டி.பி.சி.,ஒரு கவர்ச்சிகரமான, பாதுகாப்பான முதலீடாக இருக்கும்.

அதேநேரம், அதிக லாப நோக்கம் மற்றும் விரைவான வளர்ச்சியை எதிர்பார்ப்பவர்கள், தனியார் நிறுவனங்களை நாடலாம், ஆனால், அவற்றில் அதிக செயல்பாட்டு மற்றும் சந்தை அபாயங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தின் எதிர்காலம், அதன் மெகா மூலதனச் செலவுத் திட்டங்களை எவ்வளவு திறம்படச் செயல்படுத்துகிறது என்பதிலும், அரசு நிர்ணயிக்கும் ஒழுங்குமுறைச் சூழலையும் பொறுத்தே அமையும்.

பொறுப்பு துறப்பு


இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

-ஷ்யாம் சேகர்,

ஐ தாட்பிஎமஎஸ் பங்கு ஆய்வு குழு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us