பண்டமென்டல் அனாலிசிஸ் : நடப்பாண்டில் சவாலை சமாளிக்குமா 'இண்டிகோ'
பண்டமென்டல் அனாலிசிஸ் : நடப்பாண்டில் சவாலை சமாளிக்குமா 'இண்டிகோ'
UPDATED : ஜன 04, 2026 02:36 AM
ADDED : ஜன 04, 2026 02:33 AM

இண்டிகோ என்ற பெயரில் இன்டர்குளோப் ஏவியே ஷன் நிறுவனம் விமான போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவுக்குள் மட்டுமல்லாது; சர்வதேச அளவிலும் விமானப் போக்குவரத்து சேவையை செயல்படுத்தி வருகிறது.
இந்நிறுவனம் இயக்கும் விமானங்களில் பெரும்பாலானவை, 'ஏர்பஸ் 320' ரகத்தை சேர்ந்தவை. இதனால் இந்நிறுவனம் தனது செயல்பாடுகளை சீராகவும் எளிமையாகவும் நடத்த உதவுகிறது. இண்டிகோவின் செயல்பாடுகள் குத்தகை அடிப்படையிலான மாடலை சார்ந்தவை. அதாவது இந்த நிறுவனத்துக்கென சொந்தமான விமானங்கள் ஏதும் இல்லை.
தனது சிக்கனமான மற்றும் நிலையான அணுகுமுறையின் வாயிலாக அதிக இடர்பாடுகள் நிறைந்த இந்தத் துறையில், இண்டிகோ நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக இருக்கிறது.
பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் உச்சத்திலிருந்த விமான போக்குவரத்துத் துறை, தற்போது வெறும் நான்கு நிறுவனங்களாக சுருங்கியுள்ளது.
![]() |
நெ ட்வொர்க் வழித்தடங்கள்
உள்நாட்டு வழித்தடங்கள்
91
சர்வதேச வழித்தடங்கள்
40
விமான பயணிகள் எண்ணிக்கை 16.1 கோடி
ரயில் பயணிகள் எண்ணிக்கை 700 கோடி
(2024 - 2025)
இண்டிகோ நிறுவனம், தனது உள்நாட்டு சேவைகளை விரிவுபடுத்துவதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. 2023ம் நிதியாண்டில், 78-ஆக இருந்த உள்நாட்டு வழித்தடங்கள் 2025-ம் நிதியாண்டில், 90-ஐ எட்டியுள்ளன.
வரும் 2030-ம் ஆண்டுக்குள், இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 140லிருந்து 180 ஆக உயரும் என்பதால் இது இண்டிகோ நிறுவனம் வளருவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
விமானங்களின் எண்ணிக்கை
தற்போது இண்டிகோ நிறுவனம் கிட்டத்தட்ட 410 விமானங்களை, இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் இயக்கி வருகிறது. இந்த எண்ணிக்கை வளர்ச்சி என்பது கடந்த 18 ஆண்டுகளாக தொடர் உழைப்பு மற்றும் பல்வேறு புதுமைகள் அறிமுகப்படுத்தி வந்ததால் சாத்தியமானது.
விமான போக்குவரத்து
இந்திய விமான போக்குவரத்துத் துறை வரும் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைய உள்ளது. விமான பயணியரின் எண்ணிக்கை ரயில் பயணியரின் எண்ணிக்கையை எட்டும் அளவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.
வளர்ச்சிக்கான காரணங்கள்
'ஏர் இந்தியா' 313 விமானங்களையும்; 'ஆகாசா' 30 விமானங்களையும்; 'ஸ்பைஸ்ஜெட்' 40 விமானங்களையும் கொண்டுள்ளது. ஆனால் இண்டிகோ 417 விமானங்களை வைத்துள்ளது.
சர்வதேச சேவை: கடந்த 2011ம் ஆண்டிலேயே, இண்டிகோ சர்வதேச சேவையை தொடங்கியிருந்தாலும், 2018ம் நிதியாண்டு வரை, இந்நிறுவனம் உள்நாட்டு சேவையிலேயே கவனம் செலுத்தியது. அதன்பிறகு சர்வதேச சேவையில் கவனம் செலுத்த தொடங்கியது. சர்வதேச வழித்தடங்களின் எண்ணிக்கையை, 25லிருந்து 40-ஆக உயர்த்தியுள்ளது.
![]() |
ஏர் இந்தியா மற்றும் பிற சர்வதேச விமான நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இண்டிகோ நிறுவனத்தின் சர்வதேச சந்தைப் பங்கு குறைவாகவே உள்ளது. இது, எதிர்காலத்தில் வளர்வதற்கான போதுமான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம் இந்திய பணியாளர்களை பயன்படுத்துவதால், ஊதிய செலவு குறைவு. இதனால் பயண கட்டணத்தை குறைத்து, சந்தையில் போட்டியிட முடிகிறது.
அதிக ஆர்டர்
இண்டிகோ 900 விமானங்களுக்கான ஆர்டர்களை கைவசம் வைத்துள்ளது. மற்ற நிறுவனங்களான ஏர் இந்தியா 514 விமான ஆர்டர்களையும்; ஆகாசா 196 ஆர்டர்களையும்; ஸ்பைஸ்ஜெட் 120 ஆர்டர்களையும் வைத்துள்ளன. இந்த 514 விமானங்களும் அடுத்த பத்தாண்டுகளுக்குள் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025--26 நிதியாண்டின் படி, 38,500 கோடி ரூபாய் ரொக்க பணத்துடன் நிறுவனம் வலுவான நிதி நிலைமையை கொண்டுள்ளதால், சந்தையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் உள்ளது.
பாதக அம்சங்கள் 'இன்டர்குளோப் ஏவியேஷன்' (இண்டிகோ) நிறுவனத்துக்கு பல சாதகமான வாய்ப்புகள் இருந்தாலும், தற்போது சில சிக்கல்களும் உள்ளன.
அதிக சொத்துடைமை மாடலுக்கு மாறுதல்: இண்டிகோ தனது ஐ.எப்.எஸ்.சி., துணை நிறுவனத்தில் 7,294 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இது விமானங்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும். இதன் வாயிலாக இதுவரை பின்பற்றி வந்த குத்தகை மாதிரியிலிருந்து சொந்தமாக விமானங்களை வாங்கும் முறைக்கு மாறுகிறது.
வருங்காலத்தில் பெரும்பாலான பெரிய ரக விமானங்களை சொந்தமாக வைத்திருக்க திட்டமிட்டுள்ளதால், மூலதன செலவு அதிகரிக்கும் என்றும், ரொக்கப் பணம் நெருக்கடிக்கு உள்ளாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே விமான உற்பத்தியாளரை சார்ந்திருத்தல்: இண்டிகோ தனது விமானத் தேவைகளுக்கு ஏர்பஸ் நிறுவனத்தை மட்டுமே பெரும்பாலும் நம்பியுள்ளது. அதிலும் குறிப்பாக, ஏ320 சீரிஸ் விமானங்களையே அதிகம் இயக்குகிறது. எனவே, இந்த குறிப்பிட்ட மாடலில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விமான சேவையையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
சந்தைப் பங்கு குறையலாம்
ஏற்கனவே 65 சதவீதம் சந்தையை இண்டிகோ கொண்டுள்ளது. இதனால், இனி சந்தையை அதிகரிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. மாறாக, தற்போதுள்ள சந்தையை இழப்பதற்கான அபாயமே அதிகமாக உள்ளது.
அன்னிய செலாவணி இழப்புகள் (Foreign Exchange Losses): விமான குத்தகை மற்றும் கச்சா எண்ணெய் கொள்முதல் அனைத்தும் அமெரிக்க டாலரிலேயே செய்யப்படுகின்றன. ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக சரிந்து வருவதால், நிறுவனத்துக்கு குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்படுகின்றன.
விதிமுறைகளால் பாதிப்புகள்: விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிமுகப்படுத்திய புதிய விதிகளால், கடந்த மாதம் இண்டிகோவின் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அடுத்த 3 முதல் 6 மாதங்களுக்கு செயல்பாட்டு ரீதியாக பெரிய சிக்கல்களை இந்நிறுவனம் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கால கணிப்பு
ஒழுங்குமுறை சிக்கல்களால் 2026--27 நிதியாண்டு, இண்டிகோவுக்கு ஒரு சவாலான ஆண்டாகவே இருக்கும். இதை வெற்றிகரமாக கடந்தால், இந்தியாவின் மிக வலிமையான மற்றும் மிகப்பெரிய விமான நிறுவனம் என்ற தனது இடத்தை அது மேலும் உறுதியாக நிலைநாட்டும்.
![]() |
![]() |
பொறுப்பு துறுப்பு
இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.





