ADDED : பிப் 06, 2026 03:38 AM

தங்கம், வெள்ளியாக பணத்தை வீடுகளில் பூட்டி வைக்காமல், நிதிச் சந்தைகளில் முதலீடு செய்தால், 'கூட்டு வட்டி' முறையில் முதலீடு பல மடங்கு பெருகும் என, 'ரிலையன்ஸ்' குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து உள்ளார்.
இந்தியர்கள் கடந்த ஆறு தசாப்தங்களாக சிறப்பாக சேமித்து வருவதாக பாராட்டிய முகேஷ் அம்பானி, அவை சரியான முறையில் முதலீடு செய்யப்படவில்லை என்றும் கவலை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மட்டும், 5.42 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் தங்கமும், 1.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், இவை அனைத்தும் தொழில் துறை பயன்பாட்டுக்காக அல்லாமல், வெறும் வீட்டு சேமிப்புக்காகவே வாங்கப்பட்டுள்ளன. இது, பொருளாதார ரீதியாக, எந்த பலனும் தராத 'உற்பத்தி திறனற்ற' முதலீடு என தெரிவித்தார்.
எனவே, தங்கம், வெள்ளியை பாதுகாப்பான முதலீடாக கருதும் மனநிலை மாற வேண்டும் என்றும், சந்தை சார்ந்த முதலீடுகள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்றும் முகேஷ் அம்பானி வலியுறுத்தி உள்ளார்.

