'எம்எஸ்இஐ' சந்தையில் நுழையும் 'குரோ, ஜீரோதா' நிறுவனங்கள்
'எம்எஸ்இஐ' சந்தையில் நுழையும் 'குரோ, ஜீரோதா' நிறுவனங்கள்
ADDED : செப் 10, 2026 03:09 AM

'எம். எஸ்.இ.ஐ,' சந்தை வாயிலாக வர்த்தகம் செய்வதற்கான அம்சத்தை 'குரோ, ஜீரோதா' போன்ற முன்னணி தரகு நிறுவனங்கள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 'என்.எஸ்.இ., - பி.எஸ்.இ.,' ஆகியவை முன்னணி பங்கு சந்தைகளாக இருக்கின்றன. இதுதவிர, நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய பங்கு சந்தையாக, எம்.எஸ்.இ.ஐ., எனப்படும் 'மெட்ரோபாலிட்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா' நிறுவனமும் உள்ளது.
தற்போதைய சூழலில், எம்.எஸ்.இ.ஐ., சந்தை வாயிலாக வர்த்தக நிறுவனங்களும், தரகு நிறுவனங்களுமே வர்த்தகம் செய்து வருகின்றன. பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கும் எம்.எஸ்.இ.ஐ., நடவடிக்கை எடுக்கிறது.
ஏற்கனவே எம்.எஸ்.இ.ஐ., நிறுவனத்தில் குரோ, ஜீரோதா ஆகிய முன்னணி தரகு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில், இவ்விரு நிறுவனங்களும் தங்களது வர்த்தக தளங்களில் கூடுதலாக எம்.எஸ்.இ.ஐ., வாயிலாக வர்த்தகம் செய்வதற்கான அம்சத்தையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக சோதனை ஓட்டங்களை நடத்தி, சில மாதங்களில் முறையாக அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர, எம்.எஸ்.இ.ஐ., சந்தை சில மாதங்களில் டெரிவேட்டிவ் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பாக, பங்கு பிரிவில் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகிஉள்ளது.
