டூ - வீலர், கார் விபத்து காப்பீடுகளுக்கு ஜி.எஸ்.டி., சலுகை கைவிரிப்பு
டூ - வீலர், கார் விபத்து காப்பீடுகளுக்கு ஜி.எஸ்.டி., சலுகை கைவிரிப்பு
ADDED : செப் 23, 2025 12:38 AM

சென்னை : டூ - வீலர் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கான கார்களுக்கான விபத்து காப்பீடு கட்டணத்தில், ஜி.எஸ்.டி., சலுகை வழங்கப்படவில்லை.
மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரிவிதிப்பில், சீர்த்திருத்த நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, பல்வேறு பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., கட்டணம் குறைப்பு மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த 12, 28 சதவீத ஜி.எஸ்.டி., அடுக்குகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த நடைமுறைப்படி, வாகனங்களுக்கான விபத்து காப்பீடு கட்டணம் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மஞ்சள் நிற போக்குவரத்து பதிவெண் கொண்ட ஆட்டோ, வாடகை கார், வேன், மினி லாரி, லாரி, பஸ் உள்ளிட்ட சரக்கு மற்றும் பயணியர் வாகனங்களுக்கான விபத்து காப்பீட்டு கட்டணம் மட்டுமே, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
டூ - வீலர் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கான கார்களுக்கான விபத்து காப்பீட்டு கட்டணத்தில், எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை. தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு கட்டணத்திற்கான ஜி.எஸ்.டி., வரி 18 சதவீத்தில் இருந்து முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், தனிநபர் வாகன காப்பீடுக்கு வரி குறைக்கப்படாததால், டூ - வீலர், சொந்த பயன்பாட்டுக்கு கார் வைத்துள்ள பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களை விட, சரக்கு வாகனங்களுக்கு விபத்து காப்பீட்டு கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது.
எனவே, அந்த வாகனங்களுக்கு மட்டுமே, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பில் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக காப்பீட்டு நிறுவனங்களின் வட்டாரத்தில் கூறப்படுகிறது.