ADDED : நவ 02, 2025 10:39 PM

  நியுட்ரன்: வாங்க அப்பு, டவுனு… போன வாரம் செம பைட் போல?
டவுனு: மூணு நாட்கள் எங்க கை தானே ஓங்கியிருந்துச்சு.
அப்பு: என்ன பெரிசா இறக்கீட்டீங்க? மொத்தமா வாராந்திர அளவுல வெறும் 73 புள்ளியத்தான் இறக்குனீங்க. ஒரு நாள் ஓப்பனிங்கில அதை சரி செய்துடுவோம். பல தடவை இதை பார்த்ததில்லியா நீங்க?
நியுட்ரன்: அடடா! சந்தையில தான் சண்டையின்னா, இங்கேயுமா? கொஞ்சம் அமைதியா இருங்க சார். ஆகவேண்டியதைப் பார்ப்போம்.
டவுனு: சந்தையில வாய்ப்பில்லேன்னா இப்படி எங்களைத்தான் சமாதானம் பண்ணீட்டு திரிய வேண்டியது தான்.
நியுட்ரன்: டவுனு ரொம்ப கிண்டல் பண்ண வேணாம். தொடர்ச்சியா கொஞ்ச நாளைக்கு நாங்க வந்து குடிகொண்டோமுன்னா தொழிலே அல்லோலப்பட்டுடும்.
ஏற்றமும் இறக்கமும் இருக்கற சந்தைதான் வியாபாரத்துக்கு நல்லது. புரிஞ்சுக்குங்கோ, உங்களுக்கு தெரியாதது இல்லை. இருந்தாலும் சொல்றது என் கடமை!
அப்பு: சரி, சரி… டென்ஷனாகாம உங்க கடமையை அதான், வர்ற வாரத்துல இருக்கற முக்கிய விஷயங்களை சொல்லுங்க.
நியுட்ரன்: பின்னே என்ன. வேலையில்லே வேலையில்லேன்னு சும்மா கிண்டல் பண்ணா கோபம் வராதா? நாங்க வந்தா உங்க ரெண்டு பேருக்கும் வேலையில்லாம போயிரும். ஜாக்கிரதை.
வர்ற வாரம் 500க்கும் மேற்பட்ட நிறுவங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்குது. குறிப்பா பார்தி ஏர்டெல், பவர்கிரிட் கார்பரேஷன், டாடா கன்ஸ்யூமர், டைட்டான், அதானி போர்ட்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பிரிட்டானியா போன்ற ஏகப்பட்ட நிறுவங்களின் காலாண்டு முடிவுகள் வருது.
மேலும் எச்.எஸ்.பி.சி., மேனுபேக்சரிங்/சர்விசஸ்/காம்ப்போசைட் பி.எம்.ஐ., அன்னிய செலாவணி கையிருப்புன்னு ரொம்ப குறைவான இந்தியா சார்ந்த பொருளாதார தரவுகளே வெளிவர இருக்கு.
ஐ.எஸ்.எம்., மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., பேலன்ஸ் ஆப் டிரேட், ஐ.எஸ்.எம்., சர்விசஸ் பி.எம்.ஐ., ஜாப்லெஸ் க்ளெய்ம்ஸ் மற்றும் மிச்சிகன் கன்ஸ்யூமர் சென்டிமென்ட் உள்ளிட்ட சில அமெரிக்க பொருளாதார தரவுகளும் வெளிவர இருக்கு.
நிப்டி வாராந்திர சப்போர்ட்டுன்னு பார்த்தா 25,590, 25,455, 25,305, ரெசிஸ்டென்ஸின்னு பார்த்தா 25,975, 26,225, 26,375 என்ற அளவுலயும் இருக்குது. 25,845-க்கு மேலே வால்யூமோட போகாட்டி, டவுனு கையிதான் ஓங்கியிருக்க வாய்ப்பிருக்கு.
அப்பு: இப்பதான் டவுனை திட்டினீங்க. உடனே டவுனுக்கு ஆதரவாவும் பேச ஆரம்பிச்சுட்டீங்க!
டவுனு: அவர் என்ன சொந்தக் கருத்தையா சொல்றாரு. டெக்னிக்கல் சார்ட் சொல்றதை சொல்றாரு.
அப்பு: பார்ரா! ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்ணிக்கிறதை. செய்திகள் சாதகமா வந்தா ஒங்க ரெசிஸ்டென்ஸை எல்லாம் துாள்துாளாக்கி விட்டு, மேலே மேலேன்னு போய்க்கிட்டே இருப்போம்.
டவுனு: அதையேதான் நானும் சொல்ல வர்றேன். செய்திகள் பாதகமா இருந்தா, ஒங்க சப்போர்ட்டை எல்லாம் உடைச்சி அடுப்புல வைச்சுட்டு கீழ்நோக்கி போயிடுவோம்.
நியுட்ரன்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா! சந்தையில குழப்பமான சூழ்நிலைதான் நிலவுது. எதுவும் நடக்கலாம். இந்த மாதிரி சூழ்நிலையில டெக்னிக்கல் கணிப்புகள் வொர்க் அவுட் ஆகாம போயிடவும் வாய்ப்பிருக்கு.
அப்பு: அப்படிப்போடுங்க டிஸ்க்ளெய்மரை. அப்புறம் என்ன நீங்க டெக்னிக்கல் அனலிஸ்ட் நியுட்ரன்! இல்ல எதுக்கு அனலிஸ்ட்டுங்கறேன்.
நியுட்ரன்: இங்க பாருங்க. அனலிஸ்ட்டுன்னா ஆய்வு செய்து இப்படி இருக்கலாமுன்னு கருத்தைத்தான் சொல்ல முடியும். இப்படித்தான் இருக்குமுன்னு திட்டவட்டமா சொல்ல யாராலயும் முடியாது.
டவுனு: நல்லாச் சொன்னீங்க. திட்டவட்டமா சொல்ல முடிஞ்சா அப்பு, டவுனு, நியுட்ரன் என மூணுபேருக்கு சந்தையில ரோலே இல்லாமப்போயிடும்.
அப்பு: கரெக்ட்டா சொன்னீங்க டவுனு. நியுட்ரனை சீண்டிப்பாக்குறதுல ஒரு தனி சுகம்தான். இந்த வாரம் புதன் கிழமை வரைக்கும் நான் ஊர்ல இல்ல. வெளியூர் பயணம். ஏதாவது முக்கிய தகவல்னா போன் பண்ணுங்க என்று சொல்லி நகர, டவுனும் நியுட்ரனும் காரில் ஏறி கிளம்பினர்.

