ADDED : பிப் 23, 2026 04:51 AM

நியுட்ரன்: வாங்க டவுனு. சட்டை கிழிஞ்சிடுமுன்னீங்க. அதே மாதிரி வியாழக்கிழமை சட்டையை கிழிச்சுட்டீங்களே.
அப்பு: முதல் மூன்று நாள் நாங்க கிழிச்சோம். அதை சேத்துவச்சு ஒரே நாளில டவுனு கிழிச்சுட்டார்.
நியுட்ரன்: மூன்று நாளில் 348 பாயிண்ட் ஏத்துனீங்க. ஒரே நாளில 365 பாயிண்ட் இறங்கிடுச்சு.
டவுனு: ரொம்ப பாராட்டாதீங்க நியுட்ரன். ஏதாவது ஏடாகூடமா ஆயிடப்போகுது.
அப்பு: செய்திகளை பார்த்து பயந்துட்டீங்களா டவுனு?
நியுட்ரன்: வர வாரம் எப்&ஓ எக்ஸ்பைரியும் இருக்கறதால எனக்கே ரொம்ப பயமா இருக்குது.
டவுனு: ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கறவங்களுக்கெல்லாம் பயம் எதுக்கு?
அப்பு: வர்ற வாரம் எம்3 பணப்புழக்கம், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், வங்கிகள் வழங்கிய கடனின் அளவு மற்றும் வங்கியில் உள்ள வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்கு. பேக்டரி ஆர்டர்கள் நிலவரம், எஸ்&பி கேஸ் ஷில்லர் வீட்டு விலைகள், வேலையில்லாத நபர்கள் எண்ணிக்கை, ப்ரொட்யூசர்ஸ் ப்ரைஸ் இண்டெக்ஸ், சிகாகோ கொள்முதல் மேலாளர்கள் குறியீடு போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.
நியுட்ரன்: ஒரு நாளும் இல்லாத திருநாளா வார நிகழ்வுகளை நீங்க சொல்லீட்டீங்களே அப்பு.
அப்பு: இந்த வாரம் எங்க இராஜ்ஜியமுங்கறதை சொல்லாம சொல்றேன்னு வச்சுக்குங்க.
நியுட்ரன்: அதென்ன அப்படி சொல்லீட்டீங்க. நாலு நல்ல செய்தி வந்தா ஒரு கெட்ட செய்தி வராமயா போயிடும்? டவுனு சும்மா இருப்பாரா. கைவரிசைய காட்டுவாருல்ல?
டவுனு: வாராந்திர சப்போர்ட் 25334 / 25097 / 24901-லேயும் ரெசிஸ்டென்ஸ் 25847/26122/26318-லேயும் இருக்குது..
அப்பு: டவுனுகிட்ட இருந்து நான் சொன்னதுக்கு கவுன்ட்டரை காணோமே..
டவுனு: ஒரு ஸ்டேஜிக்கு மேலே எங்ககிட்ட பேச்சு கிடையாது..
நியுட்ரன்: இதைக்கேட்டா எனக்கு இன்னும் பயமாகுது.
அப்பு: செய்திகள் சாதகமா இருக்கறதால திங்கள்கிழமை மேலே கொண்டு போயிடுவோம்.
டவுனு: அதுக்கப்புறம்தான் இருக்குது வேடிக்கையே.
நியுட்ரன்: வேடிக்கை பார்க்கத்தான் நான் இருக்கேனே.
அப்பு: ஆமாம். இந்த எப்&ஓ எக்ஸ்பைரியில ஏதாவது வேடிக்கை காண்பிச்சாத்தான் உண்டு.
நியுட்ரன்: ஏன் சார்?
டவுனு: இவ்வளவு நாளா சந்தையில இருக்கீங்க. இது தெரியலை. அடுத்த எக்ஸ்பைரி நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளில் இருக்குது.
நியுட்ரன்: நாங்க அன்றாடம் பிழைப்பை பார்க்கறவுங்க. அடுத்த மாசத்தை பத்தி அடுத்த மாசம்தான் யோசிப்போம்.
அப்பு: அப்ப இறுதியா டவுனு என்னதான் சொல்றாருன்னு கேளுங்க.
நியுட்ரன்: ஓ! நேரடியா பேசமாட்டீங்களோ?
டவுனு: என்ன ஏத்தினாலும் வாரக்கடைசியில நாங்க நியுட்ரல் பண்ணிவிட்டுட வாய்ப்பிருக்கு.
அப்பு: பார்க்கத்தானே போறோம்.
நியுட்ரன்: ஐ! வாராந்திர ரீதியா எனக்கு வாய்ப்பிருக்குன்னு கேட்டா எவ்வளவு பெருமையா இருக்கு.
டவுனு: வாராந்திர ரீதியான்னா என்ன அர்த்தம் தெரியுமா? முழுவாரமும் ஓரமா உக்காந்து வேடிக்கை பார்க்கணுமுன்னு அர்த்தம்.
நியுட்ரன்: வேடிக்கையோ விளையாட்டோ! வரலாற்றில நியுட்ரன் இடம்பிடிச்சா சரி.
அப்பு: ஒரு காதணி விழாவுக்கு அழைப்பு இருக்கு. பரிசு கொடுக்கணும். நியுட்ரன் உங்க நண்பரோட நகைக்கடையில ஒரு செட் தோடு வாங்கிக்கொடுங்க - என்று சொல்ல நியுட்ரன் காரில் ஏறி மூவரும் நகைக்கடை நோக்கி புறப்பட்டனர்.

