ADDED : மே 18, 2026 12:39 AM

அப்பு: வாங்க டவுனு. என்ன நியுட்ரனை காணோம்.
டவுனு: போனவாரம் சந்தை போன போக்குல ஊருக்கு போய் செட்டிலாயிட்டாரோ!
நியுட்ரன்: வந்துட்டேன். டயத்துக்கு வரலேன்னா ஊரோட போயிட்டேன்னு அர்த்தமா.
டவுனு: வியாபாரமும் செய்யறதில்லை. வெட்டி ஆபீசர்தான். சட்டுபுட்டுன்னு கிளம்பி டயத்துக்கு வரவேணாமா?
நியுட்ரன்: ஓப்பனிங்கிலேயே சிக்சரா. வியாபாரம் பண்ண விடறீங்களா. போனவாரம் என்ன நடந்துச்சு. சராசரியா நாளொன்னுக்கு 300 புள்ளிகள் ஸ்விங்கும், வாரந்திர அளவில பார்த்தா 734 புள்ளிகள் ஸ்விங்கும் (ஹை-லோ இடைவெளி) இருந்துச்சு. தவிர வாராந்திர அளவில 532 புள்ளிகள் இறங்கியிருக்குது.
அப்பு: முடிஞ்சுதா இல்ல இன்னும் புள்ளி விவரம் இருக்குதா.
நியுட்ரன்: கொஞ்சமாவது வியாபாரம் பண்ண வாய்ப்பு கொடுக்கணுமுல்ல. முன்னே போனா முட்டுது. பின்னே போனா உதைக்குதுங்கற மாதிரியில்ல இருக்குது.
டவுனு: பயந்துட்டீங்களா. உங்க அனுபவத்தில இதை விட பயங்கரமானதெல்லாம் பார்த்திருப்பீங்களே!
நியுட்ரன்: நான் ஒரு வாரம் ஊருக்கு போறேன்.
டவுனு: நல்ல முடிவு.
அப்பு: வர்ற வாரம் 'இன்ப்ராஸ்ட்ரக்சர் அவுட்புட், ஹெச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்கள் /சேவை நிறுவனங்கள் கொள்முதல் மேலாளர்களின் குறீயீடு, வங்கிகளில் உள்ள வைப்பு நிதி மற்றும் வழங்கிய கடனின் அளவில் வளர்ச்சி, எம்3 பணப்புழக்கம், அன்னிய செலவாணி கையிருப்பு' போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வரவுள்ளன.
இதுதவிர, வீடுகள் விற்பனை, கட்டுமானத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிகள், எஸ்&பி குளோபல் உற்பத்தி நிறுவனங்கள் /சேவை நிறுவனங்கள் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, மிச்சிகன் நுகர்வோர் மனநிலை போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வெளிவர இருக்குது.
டவுனு: டெக்னிக்கல் அனாலிசிஸ் படி வாராந்திர ரீதியில் 23,272/ 22,900/22,619ல் சப்போர்ட்டும் 24,006/ 24,369/24,650ல் ரெசிஸ்டென்ஸும் இருக்க வாய்ப்பு இருக்கு.
நியுட்ரன்: நிப்டி 23,643-ல் இருக்குது. சப்போர்ட்/ரெசிஸ்டென்ஸ் கிட்டத்தட்ட ஆயிரம் புள்ளிகள் ரேஞ்சுலல்ல இருக்குது.
டவுனு: சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் சொல்லலேன்னா வருத்தப்படுறது. சொன்னாலும் வருத்தப்படுறதுங்குறதுதான் உங்க பிழைப்பா போச்சு.
நியுட்ரன்: வர்ற வாரம் எதிர்பார்ப்பை சொல்லுங்க அப்பு.
அப்பு: 24,100-க்கு மேலே போனா இறக்கம் தவிர்க்கப்படலாம். 23,400-க்கு கீழே போனா 23,100 வரை போக வாய்ப்பு இருக்கு.
நியுட்ரன்: இறக்கத்தை தவிர்க்க இன்னும் 460 புள்ளிகள் மேலே போகனுமுன்னு சொல்றீங்களே!
டவுனு: டெக்னிக்கலா அதுதான் நிலைமை.
நியுட்ரன்: 24,100-ஐ சுலபமா கடந்துடுமா என்ன?
டவுனு: அதை உங்களை மாதிரி அனுபவஸ்தர்தான் சரியா சொல்ல முடியும்.
நியுட்ரன்: இடக்குப்பேச்சு வேண்டாம். கடக்குமா கடக்காதா?
அப்பு: நீங்க ஒரு வாரம் ஊருக்கு போயிட்டு வாங்க அப்புறமா சொல்றோம்.
நியுட்ரன்: சொல்றோமா? இது சரியா படலியே.
டவுன்: உங்களுக்கு என்ன கவலை. நீங்களோ ஊருக்கு போகப் போறீங்க.
அப்பு: 24,100 கடக்குறது இல்லை அதுக்கு மேலே நிலைத்து நிற்கிறதுதான் முக்கியம்.
நியுட்ரன்: மகிழ்ச்சி. ஊருக்கு போயிட்டு வந்து 24-ம் தேதி சந்திப்போம்.
அப்பு: அப்ப நிஜமாவே பயணமா?
நியுட்ரன்: இந்த வாரம் கொஞ்சம் மார்க்கெட்டுக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு நான் ஊரை சுத்தி எக்ஸ்பீரியன்ஸ் கலெக்ட் பண்ணிட்டு வர்றேன். அதுவும் ஒரு இன்வெஸ்ட்மென்ட்தானே!
அப்பு: ஊருக்கு போறீங்க. வீட்டுல செய்த அதிரசம் கொண்டுவந்திருக்கேன் சாப்பிட்டுட்டு போங்க - என அப்பு சொல்ல மூவரும் அதிரசம் சாப் பிட்டுவிட்டு கிளம்பினர்.
