ADDED : மே 25, 2026 01:58 AM

நியுட்ரன்: வாங்க அப்பு. சொல்லி வச்ச மாதிரி 24,100 பக்கம் எட்டியே பார்க்க மாட்டேங்குதே நிப்டி. 23,859ல யு-டர்ன் போட்டுடுச்சே!
அப்பு: சைடுவேய்ஸில போகாம ஆக்டிவ்வா இருக்குதேன்னு சந்தோஷப்பட்டுக்குங்க.
டவுனு: வெள்ளி-டு-வெள்ளி கணக்குல 75 புள்ளிகள் ஏறினாலும் வாரந்திர அதிகம்-குறைவுக்கு நடுவே 542 புள்ளிகள் வித்தியாசம் இருந்துச்சு.
நியுட்ரன்: ஊருக்கு போன நேரம் பார்த்து எனக்கு ஓரு நாள் நல்ல வாய்ப்பு வந்துருக்கு.
டவுனு: வாய்ப்பு சொல்லிட்டு வராது. சந்தைக்குள்ளேயே இருந்தாலும் பராக்கு பார்த்துட்டு இருந்தா வியாபாரம் பண்ண முடியாது.
நியுட்ரன்: நெக்ஸ்ட்!
அப்பு: 'வங்கிகள் வழங்கிய கடன் அளவு/ டிபாசிட்டின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலவாணி கையிருப்பு மற்றும் எம்3 பணப்புழக்கம்' போன்ற இந்திய பொருளாதார தரவுகளும், 'எஸ்&பி/கேஸ்-ஷில்லர் 20 நகரங்களின் வீட்டு விலை குறியீடு, கான்பரன்ஸ் போர்டின் நுகர்வோர் நம்பிக்கை குறியீடு, உணவு மற்றும் எரிசக்தி விலைகளை தவிர்த்த தனிநபர் நுகர்வு செலவின குறியீடு, டியுரபிள் குட்ஸ் ஆர்டர்கள், ஜி.டி.பி., வளர்ச்சி மதிப்பீடு, சிகாகோ கொள்முதல் மேலாளர்கள் குறியீடு' போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகளும் வரும் வாரத்தில வெளிவர இருக்குது.
நியுட்ரன்: 23,400/23, 090/22,880-ல வாராந்திர சப்போர்ட்டும், 23,945/24,175/24,380-ல வாராந்திர ரெசிஸ்டென்ஸும் இருக்குது.
டவுனு: அட! ஊர்ல சும்மா இருந்ததால சப்போர்ட் ரெசிஸ்டென்ஸை ரெடி பண்ணிட்டு வந்துட்டீங்க போல.
அப்பு: ஓ! அப்ப இங்க இருந்தா பயங்கர பிசியா வியாபாரம் பண்ணுவாரோ?
நியுட்ரன்: நீங்களுமா!
அப்பு: வர்ற வாரம் மே மாத எப்&ஓ எக்ஸ்பைரி இருக்குது. வியாழக்கிழமை சந்தைக்கு விடுமுறை.
டவுனு: நியுட்ரன் ஊர்ல போய் சும்மா இருந்ததால நிறைய ஆராய்ச்சி பண்ணியிருப்பீங்க. வர்ற வாரம் குறித்த உங்க எதிர்பார்ப்பை சொல்லுங்க.
நியுட்ரன்: எகத்தாளத்துல உங்களை அடிச்சுக்க முடியாதுங்க. கேட்கிறதால சொல்றேன். போர் சூழலும் சந்தை மாதிரியே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா மாறிக்கிட்டே இருக்குது. எனக்கென்னவோ, ஓரளவுக்கு நிலைமை சீரடையும் போல தெரியுது. அதனால இந்த வாரம் 24,100-ஐ தாண்ட வாய்ப்பிருக்குன்னு தோணுது.
டவுனு: அப்ப மார்க்கெட் ஏறுமுன்னு சொல்றீங்க.
நியுட்ரன்: அப்படி நேரடியா சொன்னா ரொம்ப கலாய்ப்பீங்க. அதனால மறைமுகமா சொன்னேன்.
அப்பு: சரியா சொன்னீங்க நியுட்ரன். எனக்கும் அப்படித்தான் தோணுது.
டவுனு: உங்களுக்கு ஆதரவா பேசிட்டா போதுமே. உடனே பாராட்டிட வேண்டியது. நாலு வர்த்தக நாள்தான் இருக்குது. அத மறந்துராதீங்க.
நியுட்ரன்: 24,100-ஐ சுலபமா கடக்க விடமாட்டீங்களா டவுனு?
டவுனு: கொஞ்சம் டவுட்டுதான்.
நியுட்ரன்: அப்புறம் ஏன் அப்புவை திட்டுனீங்க.
அப்பு: நம்ம டவுனுதானே. விடுங்க.
நியுட்ரன்: இதுதாங்க அப்புவோட கேரெக்டர்
டவுனு: ஏன்னா, இறக்கங்கள் நீண்டகாலம் நிலைப்பதில்லை.
நியுட்ரன்: என்ன ஒரு தத்துவம்.ஆட்டோ பின்னாடியே எழுதலாம் போலிருக்கே.
அப்பு: அதுக்காக ஒரேயடியா ஏற்றம் வந்துடு முன்னு நினைச்சுக்காதீங்க. சூழ்நிலை உகந்ததா இருந்தா 24,100 சாத்தியமுன்னு மட்டும்தான் சொல்றேன்.
நியுட்ரன்: இந்த வாரம் இல்லாட்டியும் அடுத்தவாரமாவது நடந்துடாதா என்ன?
அப்பு: குசும்புக்கார ஆளுங்க நீங்க. போற போக்குல கலாய்க்குறீங்க பாத்தீங்களா.
டவுனு: உங்க எதிர்பார்ப்பையெல்லாம் பார்த்தா எனக்கு தற்காலிகமா எண்டு கார்டு போட்டுறுவீங்க போல. பசிக்குது. பேல் பூரி சாப்பிடலாமா? என்று டவுனு கேட்க மூவரும் சாட் ஷாப்பை நோக்கி புறப்பட்டனர்.
