அமெரிக்காவின் வட்டி விகிதத்தால் இந்திய பத்திரங்கள் வருவாய் அதிகரிப்பு
அமெரிக்காவின் வட்டி விகிதத்தால் இந்திய பத்திரங்கள் வருவாய் அதிகரிப்பு
ADDED : மே 01, 2026 02:02 AM

அ மெரிக்க கருவூல பத்திரங்களின் வட்டி விகித உயர்வு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ஆகியவற்றால், இந்திய அரசு பத்திரங்களின் மதிப்பு சரிந்து, வட்டி வருவாய் அதிகரித்து வருகிறது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என அறிவித்த பிறகு, அங்குள்ள அரசு பத்திரங்கள் விற்பனை அதிகரித்தது.
இதனால், அமெரிக்காவின் 10 ஆண்டுகால கடன் பத்திரங்களின் வட்டி 4.43 சதவீதமாக உயர்ந்தது.
இதுதவிர, மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் நிதி பற்றாக்குறை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற காரணங்களால், நம் நாட்டில் 10 ஆண்டு கால அரசு கடன் பத்திரங்களின் வட்டி வருவாய் (6.48% 2035 பத்திரங்கள்) நேற்று 6.98 முதல் 7.05 சதவீதம் வரை உயர்ந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்கனவே நெருக்கடி நிலவும் நிலையில், அமெரிக்க பத்திரங்களின் இந்த வட்டி உயர்வு இந்திய சந்தைக்கு கூடுதல் சவாலாக அமைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
