இன்சூரன்ஸ்: குழு காப்பீட்டு திட்டங்களுக்கு வயது வரம்பு இல்லையா?
இன்சூரன்ஸ்: குழு காப்பீட்டு திட்டங்களுக்கு வயது வரம்பு இல்லையா?
UPDATED : ஏப் 20, 2026 02:05 AM
ADDED : ஏப் 20, 2026 02:03 AM

கேள்வி: காப்பீடு தொடர்பாக எனக்கு இரண்டு சந்தேகங்கள் உள்ளன.
1.டாடா கேபிடல் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டுக்கடன் பெற்று, தவறாமல் மாத தவணை மற்றும் காப்பீட்டு தொகையையும் 28.6.2023 முதல் செலுத்தி வருகிறேன். தற்போது கடனை முன்கூட்டியே முடிக்க அணுகியபோது, காப்பீட்டையும் சேர்த்து முடிக்க வேண்டும் என்றும், அதற்கு கிட்டத்தட்ட 3.80 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட தொகையை திரும்ப தருவதாகவும் கூறுகின்றனர். காப்பீட்டு தொகையையும் கடனாகவே கருதி வசூலிப்பதாக கூறுகின்றனர். இது சரியா? விளக்கம் அளிக்கவும்.
2. வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் பிரதமரின் பீமா யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 20 ரூபாய் செலுத்தி, விபத்து ஏற்பட்டால் 2 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும் திட்டத்தில், இந்தியன் வங்கி (மேடவாக்கம் கிளை) வாயிலாக நானும் எனது மனைவியும் 13.8.2019ல் விண்ணப்பித்தோம். இருவருக்கும் விண்ணப்பம் ஏற்றுக்கொண்டதாக விண்ணப்ப எண்களுடன் 10.06.2021ல் குறுஞ்செய்தி வந்தது.
ஆனால், இதுவரை இருவருக்கும் ஆண்டு சந்தா பிடித்தம் செய்யப்படவில்லை. இது குறித்து மேலாளரிடம் கேட்டபோது, மெசேஜ் வரவில்லை என்றும், பிரீமியம் பிடித்தம் செய்யப்படாதது உண்மைதான் என்றும் கூறி, மீண்டும் புதிதாக விண்ணப்பம் தர சொல்கின்றனர். இது குறித்த விளக்கம் தரவும்.
- தாமோதரன், சென்னை
பதில் 1: வீட்டு கடனுடன் சேர்த்து ஆயுள் காப்பீட்டு பாலிசி வழங்குவது வழக்கமான நடைமுறைதான். இந்த பாலிசிக்கான பிரீமியம், கடன் தொகையில் சேர்த்து அமைக்கப்படும்; அதற்கு கட்டணங்கள் மற்றும் வட்டியும் விதிக்கப்படும்.
இந்த பாலிசியின் நோக்கம், கடன் பெறுபவர் மரணமடைந்தால் நிலுவையில் இருக்கும் கடன் தொகையை பாதுகாப்பதாகும். அப்போது நிலுவை தொகை வீட்டு கடன் வழங்குநருக்கு செலுத்தப்படும்; மீதமுள்ள காப்பீட்டு தொகை (இருந்தால்) நியமனருக்கு வழங்கப்படும்.
உங்கள் விஷயத்தில், நீங்கள் கடனை முன்கூட்டியே அடைக்க விரும்புகிறீர்கள். ஆனால் வீட்டு கடன் நிறுவனம், ஆயுள் காப்பீட்டு பாலிசியை முன்கூட்டியே முடிக்க அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறது.
உங்கள் கேள்வியில் முழு விபரங்கள் இல்லை. இருப்பினும், முன்கூட்டியே கடனை அடைப்பதற்கான கட்டணம் காப்பீட்டு பாலிசிக்காக அல்லாமல், கடனுக்காக இருக்கலாம். எனவே, உங்கள் கடன் ஒப்பந்தத்தை பார்த்து, அதில் இப்படியான கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
மேலும், உங்கள் கடன் நிலையான வட்டி விகிதமா அல்லது 'புளோட்டிங் வட்டி' விகிதமா என்பதையும் அறியுங்கள். சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தபடி, புளோட்டிங் வட்டி கடன்களுக்கு முன்கூட்டிய அடைப்பு கட்டணம் விதிக்க கூடாது.
பாலிசி குறித்து, கடனை முன்கூட்டியே அடைத்தால் ஒரு தொகை திரும்ப வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். இது 'சரண்டர் வேல்யூ'வாக இருக்கலாம். உங்கள் பாலிசி ஆவணத்தை பார்த்து, அந்த கணக்கீடு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.
பொதுவாக, கடனை பாதுகாக்க வழங்கப்படும் இத்தகைய பாலிசிகள் டேர்ம் இன்சூரன்ஸாக இருக்கும். இதில், பிரீமியம் செலுத்துவதை நிறுத்தினால் பாலிசி முடிவடையும். ஆனால் உங்கள் பாலிசி அப்படியில்லை என்பது போல தெரிகிறது.
நீங்கள் விரும்பினால், இந்த பாலிசியை தொடர்ந்து வைத்து கொள்ளலாம். அப்போது, பாலிசி காலம் முடியும் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். ஆனால், அதற்கான பிரீமியம் செலுத்த வேண்டும்.
மேலும், நீங்கள் இதை விட்டுவிட்டு ஒரு புதிய பாலிசியை எடுத்தால், உங்கள் வயது அதிகரித்திருப்பதால் செலவு கூடும்.
மாற்றாக, இந்த பாலிசியை 'பெயிடு அப்'ஆக மாற்ற முடியுமா என்று கேட்டு பார்க்கவும். அப்படியானால், இனி பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை; ஆனால் குறைந்த அளவு காப்பீட்டு தொகை பாலிசி காலம் முடியும் வரை கிடைக்கும்.
பதில் 2: பிரீமியம் இதுவரை கழிக்கப்படவில்லை, மேலும், வங்கி மேலாளர் புதியதாக விண்ணப்பித்து இந்த பாலிசியை பெறுமாறு கூறியுள்ளதால், தயங்காமல் அதனை செய்யலாம். இந்த பிரீமியம் மே அல்லது ஜூன் மாதங்களில் கழிக்கப்படும். காப்பீட்டுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு, ஆதார் இணைப்புடன் இருக்க வேண்டும்.
வயது காரணமாக காப்பீட்டு பாதுகாப்புக்கு தகுதி இழக்கும் முன் உடனே இந்த செயல்முறையை முடிக்கவும். மேலும், இந்த முறை பிரீமியம் சரியாக கழிக்கப்படுகிறதா என்பதை கவனமாக கண்காணிக்கவும்.
![]() |
கேள்வி: எனது நிறுவனம் எனக்கும், எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் குழு மருத்துவ காப்பீடு வழங்குகிறது. அத்துடன் கூடுதல் பிரீமியம் செலுத்தினால், பெற்றோருக்கும் காப்பீடு வழங்க வழிவகை செய்கிறது.
எனது தந்தைக்கு தற்போது 87 வயது ஆகிறது. குழு காப்பீட்டு திட்டங்களை பற்றி இணையத்தில் தேடியபோது, இதில் வயது வரம்பு ஏதுமில்லை என்றும், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு காத்திருப்பு காலம் கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது எனது தந்தைக்கு புரோஸ்டேட் மற்றும் வாஸ்குலர் தொடர்பான பாதிப்புகள் உள்ளன. ஒருவேளை மருத்துவமனை அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தால், அது இந்த நிறுவன காப்பீட்டின் கீழ் வருமா? இது குறித்து தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்.
- குமார் சுப்ரமணியன்
பதில்: நீங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், உங்கள் தந்தையின் தற்போதைய உடல்நல பிரச்னைகளுக்கான அறுவை சிகிச்சைக்கு காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்கும் போல தெரிகிறது. இருப்பினும், இதை உறுதிப்படுத்த நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமே நேரடியாக, எழுத்துப்பூர்வமாக தகவலை பெறுவது அவசியம்.
இணையம் போன்ற மறைமுக ஆதாரங்களின் மீது மட்டும் நம்பிக்கை வைக்க வேண்டாம். நிறுவனத்தின் இணையதள தகவல்களும் பழையதாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம்.
நேரடியாக தகவலை பெற்ற பிறகு, அறுவை சிகிச்சைக்காக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். நெட்வொர்க் மருத்துவமனைகள் இருக்கலாம்; மேலும், சிகிச்சை செலவின் ஒரு பகுதியை 'கோ-பே'வாக நீங்கள் ஏற்க வேண்டிய சூழலும் இருக்கலாம்.
அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன் நீங்கள் தெளிவான தகவல்களை பெற வேண்டும்.

