இன்சூரன்ஸ் : 'ஆயுஷ்மான் பாரத்'ஐ ஏன் பெரிய மருத்துவமனைகளில் ஏற்பதில்லை?
இன்சூரன்ஸ் : 'ஆயுஷ்மான் பாரத்'ஐ ஏன் பெரிய மருத்துவமனைகளில் ஏற்பதில்லை?
ADDED : நவ 09, 2025 10:37 PM

என் குடும்பத்தில் என்னுடன் சேர்த்து நான்கு பேர் உள்ளோம். இதுவரை எந்தவொரு மருத்துவ காப்பீடும் எடுக்கவில்லை. ஒரு நல்ல காப்பீடு நிறுவனத்தை சொல்லுங்கள்.
- ராஜாராம், சென்னை.
மருத்துவ காப்பீடு எடுப்பது என்பது ஒரு நல்ல முடிவு. உங்கள் குடும்பத்தில் நான்கு பேருக்கும் பொருந்தும் 'புளோட்டர் பாலிசி' எனும், குடும்பத்திற்கான பாலிசி ஒன்றை எடுக்கலாம். குழந்தைகளுக்கான வயது வரம்பை பல நிறுவனங்கள் 18- - 25 என கூறுவதால், அதற்கு தகுதி பெற்றவர்களா என பார்க்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு தனி பாலிசி எடுக்க வேண்டும்.
காப்பீடு நிறுவனங்களின் இணையதளத்தில், உங்கள் குடும்ப விபரங்களை பதிவிட்டால், பிரீமியம் தொகை எவ்வளவு வரை இருக்கும் என தெரிந்துகொள்ளலாம்.
காப்பீடு நிறுவனங்கள் மற்றும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., இணையதளத்திலும் 'கிளைம் செட்டில்மென்ட் விகிதத்தை' பார்த்தால், நிறுவனங்கள் கிளைம்களை எவ்வளவு விரைவாக செலுத்துகின்றன என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
ஏற்கனவே, ஏதேனும் பாலிசி வைத்திருந்தால், அந்த நிறுவனத்திலும் மருத்துவ காப்பீடு பற்றி விசாரித்து பின் எடுக்கலாம். இதுதவிர, நல்ல சேவை வழங்கும் நிறுவனங்கள் பற்றி, உங்கள் நண்பர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு, அதன் பின் மருத்துவ காப்பீடு எடுக்கலாம்.
என் அம்மாவிற்கு, 69 வயது ஆகிறது. அவருக்கு ஏற்கனவே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தொற்று, போன்ற நோய்கள் உள்ளன. கார்ப்பரேட் பாலிசி நான்கு லட்சம் ரூபாய்க்கு இருக்கிறது. ப்ரீ-எக்ஸிஸ்டிங் டிசீசஸ் இருப்பதால், பல நிறுவனங்களில் புதிய பாலிசி எடுக்க முடியவில்லை. மேற்கண்ட நிலைமையில், எந்த நிறுவனம் மூத்த குடிமக்களுக்கான பாலிசியை வழங்குகிறது?
- ரமேஷ், மின்னஞ்சல்.
பணியிடத்தில் காப்பீடு இருப்பது ஒரு நல்ல வசதி தான். அம்மாவுக்கு, கூடுதலாக ஒரு தனிப்பட்ட பாலிசியை எடுக்க நினைப்பதும் சரியே. ஆனால், ரிஸ்க் வாடிக்கையாளர் என கருதி, பல நிறுவனங்கள் காப்பீடு வழங்க மறுக்கத்தான் செய்கின்றன. மனம் உடைய வேண்டாம்.
சில நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு என்றே பிரத்யேகமாக பாலிகளை வழங்குகின்றன. தற்போது மருத்துவத்துக்கான செலவுகள் அதிகமாக இருப்பதால், பிரீமியம் கூடுதலாக இருப்பதை கருத்தில் கொள்ளாமல், பாலிசி எடுக்கலாம்.
அடுத்த ஆண்டு உங்கள் அம்மாவுக்கு 70 வயது ஆனவுடன், 'ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா' திட்டத்தில் சேர்க்கலாம். அவர்களுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும். குறிப்பாக, ஏற்கனவே உள்ள நோய்களுக்கும் காப்பீடு கிடைக்கும்.
எனக்கு வயது 65. கடந்த இரண்டு ஆண்டுகளாக என் கைபேசிக்கு பலர் அழைத்து, காப்பீடு திட்டங்களை விற்க முயற்சிக்கின்றனர். இது உண்மையில் காப்பீட்டு நிறுவனங்களின் அழைப்புகளா? மூத்த குடிமக்களுக்கு எளிதாக கிடைக்கும் குறுகிய கால காப்பீடு திட்டங்கள் உள்ளனவா? தினசரி மருந்து செலவுகளுக்கான திட்டங்கள் ஏதும் உள்ளனவா?
- எல்.வி. மணி,
நரசிம்ம நாயக்கன்பாளையம்.
மொபைல் போன்களில் காப்பீடு தொடர்பாக மார்க்கெட்டிங் அழைப்புகள் வருவது அதிகமாகத் தான் உள்ளது. தெரியாத எண்களில் இருந்து, எந்த அறிமுகமும் இல்லாமல் வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம். அவை சைபர் மோசடிகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு.
உங்களுக்கு தெரிந்த ஏஜென்ட், புரோக்கர் அல்லது காப்பீடு நிறுவனம், வங்கிகள் வாயிலாக ஆலோசனை பெற்று காப்பீடு எடுக்கலாம்.
சில நிறுவனங்கள், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு பாலிசிகளுடன், 'அவுட் பேஷன்ட் டிபார்ட்மென்ட்' எனப்படும் வெளிநோயாளர்களின் சிகிச்சை செலவுகளுக்காக, 'ஆட்-ஆன்' அல்லது 'ரைடர்' பாலிசிகளை வழங்குகின்றன.
மருத்துவமனை செலவு காப்பீடுக்கு அப்பாற்பட்டு, கடுமையான நோய் காப்பீடு, பெரிய அறுவை சிகிச்சைக்கான காப்பீடு, புற்றுநோய் அல்லது இதய நோய்க்கான சிறப்பு காப்பீடு போன்ற திட்டங்களும் உள்ளன.
உங்களுக்கு ஏற்ற திட்டம் பற்றி ஏஜென்ட் அல்லது காப்பீட்டு நிறுவனத்திடம் கேட்டு, பின் எடுக்கலாம்.
மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் ஏன் அப்பல்லோ போன்ற பெரிய மருத்துவமனைகளில் ஏற்கப்படுவதில்லை?
- வாட்ஸாப்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் உறுப்பினர்கள் அரசு மருத்துவமனைகளிலும், இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம்.
நீங்கள் சிகிச்சை பெற விரும்பும் மருத்துவமனை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை முதலில் சரிபார்க்கவும். அவ்வாறு இணைந்திருந்தால், அவர்கள் சேவை வழங்க மறுக்க முடியாது.
அனைத்து சிகிச்சைகளும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அடங்காது. உதாரணமாக, வெளிநோயாளர் சிகிச்சை, உடல் உறுப்பு மாற்று சிகிச்சை போன்றவை காப்பீட்டில் சேராது. இந்த திட்டம் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான செலவுகளுக்கு மட்டுமே உதவும்.
பொது சிகிச்சை அளிக்கும் முதன்மை மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை வழங்கும் இரண்டாம் நிலை மருத்துவமனைகள் மற்றும் மேம்பட்ட அறுவை சிகிச்சைகள் அளிக்கும் மூன்றாம் நிலை மருத்துவமனைகள் ஆகிய அனைத்திலும் நீங்கள் பயன்பெறலாம்.
க.நித்ய கல்யாணி
காப்பீடு குறித்த நிபுணத்துவ எழுத்தாளர், பெருநிறுவன வரலாற்றாசிரியர்

