ரூ.50,00,000 கோடி பங்கு சார்ந்த பண்டுகளில் குவிந்த முதலீடுகள்
ரூ.50,00,000 கோடி பங்கு சார்ந்த பண்டுகளில் குவிந்த முதலீடுகள்
ADDED : நவ 11, 2025 01:13 AM

மியூச்சுவல் பண்டுகளில் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு, இதுவரை இல்லாத அளவாக 50 லட்சம் கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.
நடப்பாண்டின் அக்டோபர் மாதம் வரை, பங்கு சார்ந்த திட்டங்களில் 50.83 லட்சம் கோடி ரூபாயாக முதலீடு அதிகரித்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 30 சதவீத வளர்ச்சி என்கின்றன தர வுகள்.
பங்குச்சந்தைகளில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகவும், சந்தையை பலரும் மியூச்சுவல் பண்டு திட்டங்கள் வாயிலாக அணுகுவதாகவும் துறைசார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
ஆன்லைன் வர்த்தக தளங்கள், சமூக வலைதளங்கள் வழியாகவும் சிறு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகள் குறித்து அதிகம் அறிந்து கொள்கின்றனர்.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எஸ்.ஐ.பி., முறையில் 8,500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட நிலையில், அது கடந்த செப்டம்பரில் 29,361 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இது, மியூச்சுவல் பண்டுகள் மீது சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
வட்டி விகிதங்கள் குறைப்பு உள்ளிட்ட சாதகமான பணக்கொள்கை, ஜி.எஸ்.டி., குறைப்பு போன்றவை உள்நாட்டு பொருளாதார சூழலை நிலைப்படுத்தி உள்ளதாகவும், இதன் காரணமாக பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரிக்கிறது.
இவ்வாறு கூறினர்.
55ஆவது மாதமாக மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுகள் வந்துகொண்டிருப்பது, அஞ்சறை பெட்டி சேமிப்பில் இருந்து முதலீட்டு திட்டங்களுக்கு மக்கள் மாறுவதை காட்டுவதாக பி.எல்., கேபிடல் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு ஆலோசகர் பங்கஜ் ஸ்ரேஸ்தா தெரிவித்துள்ளார்.

