ADDED : அக் 06, 2025 10:53 PM

கார்களுக்கு சப்ஸ்கிரிப்ஷன் மாடல், அதாவது சந்தா கட்டி உபயோகிப்பது போல, இப்போது மொபைல் போன்களுக்கும் வந்து விட்டது. சில நிறுவனங்கள் இத்தகைய வாய்ப்பை வழங்குகின்றன.
ஐபோன் போன்ற பிரீமியம் போன்களை விலைக்கு வாங்காமல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, உதாரணமாக 12, 18 அல்லது 24 மாதங்களுக்கு, மாதாந்திர கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் முறை.
மாதாந்திர கட்டணம்: நீங்கள் போனின் விலை மற்றும் அதனுடன் வழங்கப்படும் காப்பீடு, கூடுதல் உத்தரவாதம் போன்ற கூடுதல் சேவைகளுக்கான ஒரு சிறிய தொகையை, ஒவ்வொரு மாதமும் செலுத்துவீர்கள்.
போனை மாற்றிக் கொள்வது: சந்தா காலம் முடிந்ததும், பழைய போனை திருப்பிக் கொடுத்துவிட்டு, எந்த கூடுதல் பெரிய தொகையும் செலுத்தாமல், புதிய மாடல் போனுக்கு எளிதாக மாறிக் கொள்ளலாம்.
சொந்தமாக்குதல்: சந்தா காலம் முடிந்த பின், போனை திருப்பிக் கொடுப்பதற்கு பதிலாக, மீதமுள்ள தொகையை செலுத்தி, அதை சொந்தமாக வாங்கிக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கும்.
யாருக்கு என்ன லாபம்?
இந்த சந்தா மாதிரியால் இரண்டு தரப்பினருக்கும் லாபம் உண்டு:
வாடிக்கையாளர்களுக்கு
* போனை வாங்க மொத்தமாக செலவு செய்ய தேவையில்லை; சிறிய மாதாந்திர தொகை போதுமானது
* புதிய மாடல் போன்கள் சந்தைக்கு வரும்போதெல்லாம், பழையதை எளிதாக திருப்பிக் கொடுத்துவிட்டு, புதியதிற்கு மாறலாம்
* இதனால், எப்போதும் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்
* பழைய போனை விற்கவோ அல்லது அதற்கு நல்ல விலை கிடைக்கவோ போராட வேண்டியதில்லை. நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிடும்
* காப்பீடு, கூடுதல் உத்தரவாதம் போன்றவையும் உள்ளடங்கி இருக்கும்.
நிறுவனங்களுக்கு
* வாடிக்கையாளர்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் வந்து கொண்டே இருக்கும்
* ஒரு முறை சந்தா எடுத்த வாடிக்கையாளர், அடுத்த புதிய போனுக்கும் அதே நிறுவனத்தின் சந்தா முறைக்கு மாற வாய்ப்பு
* திருப்பி வரும் பழைய போன்களை சீரமைத்து மீண்டும் விற்பனை செய்வதால், நிறுவனம் லாபம் ஈட்ட முடியும்
* புதிய போன்களின் விற்பனையில் நிலையான வளர்ச்சியை பராமரிக்க இந்த சந்தா மாதிரி உதவுகிறது.