தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/மழைக்கால வெள்ள பாதிப்புக்கு உங்கள் வீடு தயாரா?

மழைக்கால வெள்ள பாதிப்புக்கு உங்கள் வீடு தயாரா?

மழைக்கால வெள்ள பாதிப்புக்கு உங்கள் வீடு தயாரா?


UPDATED : அக் 05, 2026 01:59 AM

ADDED : அக் 04, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 01:59 AM ADDED : அக் 04, 2026 10:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பருவமழை காலத்தில் கனமழை, வெள்ளம் போன்றவற்றால் வீடுகளும் பாதிக்கப்படலாம். இதனால் ஏற்படும் சேதம் பெரிய செலவையும் சிரமத்தையும் ஏற்படுத்தும். இந்த இன்சூரன்ஸ் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி பகுதியில், வீட்டு இன்சூரன்ஸில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை பார்ப்போம்.

வீட்டு இன்சூரன்ஸ் இருக்கிறது என்பதற்காக, வீட்டின் அனைத்து சொத்துக்களுக்கும், அனைத்து ரிஸ்க்குகளுக்கும் கவர் இருக்கிறது என்று நினைத்துக்கொள்ள கூடாது. எந்த சொத்துக்கு, எவ்வளவு தொகைக்கு, எந்தெந்த ரிஸ்க்குகளுக்கு இன்சூரன்ஸ் உள்ளது என்பதை சரிபார்க்க வேண்டும்.

'பாரத் கிருஹ ரக் ஷா' என்ற தரப்படுத்தப்பட்ட வீட்டு இன்சூரன்ஸ் பாலிசியை பொது காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. இதில், வெள்ளம் நீர் சூழ்தல் ஆகியவையும் கவர் செய்யப்படும் ரிஸ்க்குகளில் அடங்கும்.

கட்டடமா, பொருட்களா?



வீட்டு கட்டடத்துக்கான இன்சூரன்ஸும், வீட்டுக்குள் இருக்கும் பொருட்களுக்கான இன்சூரன்ஸும் வெவ்வேறானவை. கட்டட கவர், வீட்டின் கட்டமைப்பு மற்றும் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ள பில்ட்-இன் அலமாரிகள் போன்றவற்றை பாதுகாக்கும். பர்னிச்சர், வீட்டு உபயோக சாதனங்கள், தனிப்பட்ட பொருட்கள் போன்ற அசையும் பொருட்களுக்கு 'கன்டென்ட்ஸ்' கவர் தேவை.

சொந்த வீட்டில் வசிப்பவர்கள் கட்டடத்துக்கும் கன்டென்ட்ஸுக்கும் இன்சூரன்ஸ் செய்யலாம். வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் கட்டடத்துக்கு மட்டும் செய்யலாம். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தங்களது சொந்த பொருட்களுக்கு இன்சூரன்ஸ் செய்துகொள்ளலாம்.

பாரத் கிருஹ ரக் ஷாவில் கட்டடமும் கன்டென்ட்ஸும் சேர்த்து இன்சூர் செய்யப்பட்டால், கட்டட சம் - இன்சூர்டில் 20 சதவீதம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை, பொதுவான வீட்டு பொருட்களுக்கு தானாகவே கவர் கிடைக்கும். பொருட்களின் மதிப்பு அதிகமாக இருந்தால் கூடுதல் தொகைக்கு இன்சூரன்ஸ் செய்துகொள்ளலாம்.

எந்த வீட்டு இன்சூரன்ஸ் பாலிசியாக இருந்தாலும், வெள்ளம், நீர் சூழ்தல் ஆகியவற்றுக்கு கவர் இருக்கிறதா என்பதையும், கட்டடம், கன்டென்ட்ஸ் அல்லது இரண்டில் எதற்கு கவர் உள்ளது என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

எவ்வளவு தொகைக்கு?



கட்டடத்தின் இன்சூரன்ஸ் மதிப்பு அதன் சந்தை மதிப்போ அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய செலவோ அல்ல.

இன்று, அதே கட்டடத்தை மீண்டும் கட்டுவதற்கு ஆகும் செலவுதான் முக்கியம். பாரத் கிருஹ ரக் ஷாவில் வீட்டின் கார்பெட் ஏரியா மற்றும் தற்போதைய கட்டுமான செலவின் அடிப்படையில் கட்டட சம் - இன்ஷ்யூர்டு கணக்கிடப்படுகிறது.

கன்டென்ட்ஸுக்கும் யதார்த்தமான மதிப்பில் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். பாரத் கிருஹ ரக் ஷாவில், பல தீ இன்சூரன்ஸ் பாலிசிகளில் இருப்பதை போல, அண்டர் - இன்சூரன்ஸ் காரணமாக கிளைம் தொகை விகிதாசாரமாக குறைக்கப்படும் விதி இல்லை.

ஆனால் பாலிசியின் சம் இன்சூர்டுதான் காப்பீட்டு நிறுவனம் வழங்கக்கூடிய அதிகபட்ச தொகை. ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு மட்டும் இன்சூரன்ஸ் செய்திருந்தால், பெரிய சேதம் ஏற்பட்டாலும் ரூ.10 லட்சத்துக்கு மேல் கிடைக்காது.

நகைகள், வெள்ளி பொருட்கள், ஓவியங்கள், கலை மற்றும் பழங்கால பொருட்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களுக்கு தனிக்கவர் அல்லது மதிப்பீடு தேவைப்படலாம். கன்டென்ட்ஸ் இன்சூரன்ஸ் இருப்பதால் எல்லாவற்றுக்கும் தானாக கவர் கிடைக்கும் என்று நினைக்கக்கூடாது.

காம்பவுண்டு சுவர், கேட், கேரேஜ், தண்ணீர் தொட்டி போன்றவையும் கட்டட இன்சூரன்ஸில் முறையாக சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதை பார்க்க வேண்டும்.

கூடுதல் கவர்கள்



சேதமடைந்த வீட்டை பழுதுபார்க்கும் காலத்தில் மாற்று வீட்டுக்கான வாடகை, உங்கள் வீட்டில் ஏற்படும் தீ, வெள்ளம் போன்றவற்றால் பிறரது சொத்துக்கு சேதம் அல்லது ஒருவருக்கு காயம், உயிரிழப்பு ஏற்பட்டால் உருவாகும் மூன்றாம் நபர் காப்பீடு போன்றவற்றுக்கும் கூடுதல் கவர் கிடைக்கலாம்.

பாலிசியில் விலக்குகள், சிறப்பு நிபந்தனைகள், டிடக்டிபிள் போன்றவை இருக்கலாம். சேதம் ஏற்பட்ட பிறகு அல்லாமல், பருவமழைக்கு முன்பே இவற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

வீட்டையும், அதிலுள்ள பொருட்களையும் வீடியோ, புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். முக்கிய பொருட்களின் சீரியல் எண்கள், மதிப்பு, வயது, இன்வாய்ஸ் போன்ற விபரங்களையும் பாதுகாத்து வையுங்கள். சேதம் ஏற்பட்டால், முடிந்தவரை பழுதுபார்க்கவோ, பொருட்களை அகற்றும் முன்போ, சேதத்தையும் வீடியோ, புகைப்படமாக பதிவு செய்யுங்கள்.

ஆனால், வெள்ளம் அல்லது வேறு அவசர நிலையில் மனிதர்களின் பாதுகாப்புதான் முதலில், மற்றதெல்லாம் அதற்கு பிறகுதான்.

இந்த மூன்று கட்டுரைகளையும் படித்துவிட்டு பருவமழையை பார்த்து பயந்துவிடாதீர்கள். மழை, குளிர்ச்சியான வானிலை, சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றம் என நம் பருவமழையில் ரசிக்க எவ்வளவோ இருக்கிறது.

அதற்குத்தான் இன்சூரன்ஸ். ஏதாவது தவறு நடந்தால் அதன் நிதி பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும் கருவியாக அது இருக்க வேண்டும். ரிஸ்க்குகளுக்கு தயாராக இருங்கள். தேவையானவற்றுக்கு இன்சூரன்ஸ் செய்யுங்கள். பிறகு மழையை ரசிக்கவும்.

Image 1626488

கவலையில்லாமல் வாழ்வதற்குத்தானே வாழ்க்கை! அதற்கு உதவத்தானே இன்சூரன்ஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us