'கேஷ் செக்மென்ட்' வர்த்தகத்தில் குறைகிறது மார்ஜின் தொகை
'கேஷ் செக்மென்ட்' வர்த்தகத்தில் குறைகிறது மார்ஜின் தொகை
UPDATED : ஜன 14, 2026 01:34 AM
ADDED : ஜன 14, 2026 01:18 AM

பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், 'கேஷ் செக்மென்ட்' வர்த்தக முறையில் 'மார்ஜின்' தொகையை சீரமைக்க, செபியின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து, இறுதி முடிவை எடுக்க செபி முனைப்பு காட்டி வருவதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த பிரிவில் வர்த்தகம் செய்ய முதலீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மார்ஜின் தொகை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது முன்பேர வர்த்தகத்தில் முதலீடு செய்ய மிகக் குறைந்த பணம் போதும் என்பதால், அது குறித்து போதுமான விபரங்கள் தெரியாதவர்களும் கூட, அதில் அதிக ரிஸ்க் எடுக்கத் துணிகின்ற னர். அதிக இழப்புகளையும் சந்திக்கின்றனர்.
![]() |
எனவே, பொதுவான கேஷ் செக்மென்ட் வர்த்தகத்திலும் மார்ஜின் தொகையைக் குறைத்தால், முதலீட்டாளர்கள் அதிக ரிஸ்க் இல்லாத இந்த வர்த்தகத்திற்குத் திரும்புவார்கள் என்பதே செபியின் திட்டம்.
கேஷ் செக்மென்ட் பிரிவில் பங்குகளை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ, அந்த வர்த்தகத்தை உறுதி செய்ய செலுத்த வேண்டிய முன்பணமே மார்ஜின் எனப்படுகிறது.
பெரும்பாலான தரகு நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் பங்குச்சந்தைகள் விதிக்கும் 12.50 முதல் 20 சதவீதம் மார்ஜின் தொகையை வசூலிக்கின்றன.
இந்நிலையில், மார்ஜின் தொகையை குறைத்தாலும், அது 12.50 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கக் கூடாது என செபியின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
அதேநேரம், சந்தையில் ஏற்படக்கூடிய அபாயங்களை சரியாக கையாளும் வகையில், போதிய அளவு மார்ஜின் தொகை வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அக்குழு அறிவுறுத்தியுள்ளதாக, ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் செபி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு விளக்கமும் வெளியிடப்படவில்லை.
இது குறித்து பங்குச்சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டபோது, “தற்போதைய நிலையில் முன்பேர வர்த்தகத்தில் பெரும்பாலானவர்கள் தங்களின் பணத்தை இழந்து வருகின்றனர்.
''கேஷ் செக்மென்டடில் மேற்கொள்ளப்படும் தின வர்த்தகத்துக்கு செபி கடுமையான மார்ஜின் விதிமுறைகளை விதித்திருக்கிறது.
''அதனாலேயே, கேஷ் செக்மென்ட் பிரிவில் முதலீட்டு விதிமுறைகள் எளிமையாக்கப்படுவதாக தெரிகிறது. இந்த நடவடிக்கையால், தினசரி வர்த்தகர்கள் நிறைய பேர் வர்த்தகம் செய்ய முன்வருவார்கள்.
''கேஷ் மார்க்கெட்டில் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி, முன்பேர வர்த்தகத்தில் அதிக விலைக்கு விற்பதில் முதலீட்டாளர்கள் 10-12 சதவீதம் வரை லாபம் பார்த்து வந்தார்கள். 'ஆர்பிட்ரேஜ் பண்டு' என்று சொல்லபடுகிற இந்த வகை முதலீட்டு திட்டத்தில் தற்போது கிடைத்துவரும் லாப விகிதம் குறைந்துவிட்டதால், சந்தையில் பணப்புழக்கம் குறைந்துவிட்டதாக தெரிகிறது.
''இதை அதிகப்படுத்தும் நோக்கத்திலும் கேஷ் செக்மென்ட்டில் மார்ஜின் தொகையை குறைக்க நினைக்கின்றனர். இப்படி செய்வதும் ஒருவகையில் வர்த்தகர்களுக்கு சாதகமான விஷயம் தான்.
ஏனெனில், முன்பேர வணிகத்தில் பணத்தை இழக்காமல், கேஷ் செக்மென்ட்டில் வர்த்தகம் செய்ய நினைப்பார்கள்” என்றார்.


