
ஐந்து மாத உச்சத்தில் இண்டஸ் டவர்ஸ் பங்கு
'இ ண்டஸ் டவர்ஸ்' பங்கு மதிப்பு, கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் உயர்ந்து, நேற்று 416.95 ரூபாயானது. 2025 ஜூலை 8ம் தேதிக்கு பின், இந்த தொலைத்தொடர்பு கட்டமைப்பு நிறுவனத்தின் பங்கு அதிகபட்ச உயர்வு கண்டுள்ளது. நாட்டின் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கோபுரங்கள், கட்டமைப்பு வசதிகளை அமைத்து, இண்டஸ் டவர்ஸ் இயக்கி வருகிறது.
டெல்ட்டா கார்ப் பங்கு விலை 7% அதிகரிப்பு
டெ ல்ட்டா கார்ப் நிறுவனத்தின் 14 லட்சம் பங்குகளை, அதன் புரொமோட்டர் ஜெயந்த் முகுந்த் மோடி, ஒரு பங்கு 68.46 ரூபாய் விலையில் நேற்று முன்தினம் வாங்கினார். நேற்றைய வர்த்தகத்தில் இதனால், இந்நிறுவன பங்கு விலை 7 சதவீதம் வரை அதிகரித்தது. கோவா, டாமன், சிக்கிம் ஆகிய இடங்களில், 'டெல்டின் சூட்ஸ்' என்ற பெயரில் விடுதிகளை நடத்தும் இந்நிறுவனம், மிகப்பெரிய கேசினோவையும் நடத்துகிறது.
பி.எஸ்.இ., ஸ்மால்கேப் குறியீடு கடும் சரிவு
'பி .எஸ்.இ., ஸ்மால்கேப் குறியீடு' நேற்றைய வர்த்தகத்தின்போது, ஆறு மாதங்களில் இல்லாத சரிவை சந்தித்தது. 2025ம் ஆண்டில், இதுவரை இக்குறியீடு எட்டு சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் இடையில், குறியீட்டில் உள்ள 94 பங்குகள், 52 வாரங்களில் இல்லாத மிக குறைந்த விலையை தொட்டு வர்த்தகமாகின.
கெய்னஸ் டெக்னாலஜி விலை 13% இறக்கம்
'கெ ய்னஸ் டெக்னாலஜி இந்தியா' நிறுவனத்தின் பங்கு விலை, நேற்று 13 சதவீதம் வரை சரிந்து, கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த விலையை எட்டியது. நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகள் மற்றும் கணக்கு விபரங்களை வெளியிடுவதில் முரண்பாடுகள் இருப்பதாக, 'கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ்' போன்ற தரகு நிறுவனங்கள் சந்தேகத்தை எழுப்பியதே விலை வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

