
ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் புதிய பங்கு வெளியீடு
'ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வரும் 12ம் தேதி துவங்கி, 14ம் தேதி முடிகிறது. பிரிட்டிஷ் நிறுவனமான 'புருடென்ஷியல்' இந்நிறுவனத்தில் தனக்குள்ள 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இதன்படி 4.9 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதில், திரட்டப்படும் தொகை 'புருடென்ஷியல்' நிறுவனத்திற்கே செல்லும் என்பதால் நிறுவன வளர்ச்சிக்கு பயன்படாது. வரும் டிசம்பர் 19ம் தேதி, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.டி.சி.ஹோட்டல்ஸின் 9% பங்குகள் விற்பனை
'பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ' நிறுவனம், தன்னிடம் உள்ள 'ஐ.டி.சி., ஹோட்டல்ஸ்' நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை 3,856 கோடி ரூபாய்க்கு 'அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அத்தாரிட்டி, சோசியதே ஜெனரல், மோர்கன் ஸ்டேன்லி' ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளது. இதன் வாயிலாக 18.75 கோடி பங்குகள் கைமாறியுள்ளன. பங்கு ஒன்றின் விலை 205.65 ரூபாய் என விற்கப்பட்டுள்ளது. ஐ.டி.சி., ஹோட்டல்ஸ், நிறுவனத்துக்கு இந்தியாவில் 140 ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. ஒன்றாக இருந்த 'ஐ.டி.சி., மற்றும் ஐ.டி.சி.,ஹோட்டல்ஸ்' நிறுவனங்கள் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், இரு நிறுவனங்களும் பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகி வருகின்றன.

