
நிப்டி நெக்ஸ்ட் 50 இ.டி.எப்., கோடக் பண்டு அறிமுகம்
'கோடக் மியூச்சுவல் பண்டு' நிறுவனம், கோடக் நிப்டி நெக்ஸ்ட் 50 இ.டி.எப்., என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் இன்று தொடங்கி வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிறைவடைகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாய். நிப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டின் கீழ் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவதே இத்திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,500 கோடிக்கு என்.சி.டிஸ்., டாடா கெமிக்கல்ஸ் வெளியீடு
'டாடா கெமிக்கல்ஸ்' நிறுவனம், மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, அதன்வாயிலாக, 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.ஒவ்வொரு மாற்ற முடியாத கடன் பத்திரங்களும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புகொண்டவை என்றும் ஆண்டுக்கு 7.06 சதவீதம் நிலையான வட்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அரசு பங்குகள் விற்பனை
'இந்தியன் ஓவர்சீஸ் வங்கி'யில் உள்ள தனது 3 சதவீத பங்குகளை விற்பனை செய்து 1,960 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 'ஆபர் பார் சேல்' முறையில் ஒரு பங்கின் விலை 34 ரூபாய் என பங்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. இது, சந்தை விலையை விட கிட்டதட்ட 7 சதவீதம் குறைவாகும். இவ்வங்கி, பங்குகளை வாங்க நிறுவன முதலீட்டாளர்களுக்கு நேற்றும், சிறு முதலீட்டாளர்களுக்கு நாளையும் என தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் மறுசீரமைப்பு என்.சி.எல்.டி., அனுமதி
'பிளிப்கார்ட்டின்' எட்டு துணை நிறுவனங்களை, அதன் இந்திய நிறுவனமான' 'பிளிப்கார்ட் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட்' உடன் இணைக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் ஐ.பி.ஓ., வெளியிட ஒரு நிறுவனம் தெளிவான ஒற்றை அமைப்பாக இருப்பது அவசியம். இந்த மறுசீரமைப்பால், பிளிப்கார்ட் பங்குச்சந்தையில் புதிய பங்கு வெளியிடுவது உறுதியாகியுள்ளது.

