மேக்ஸ் ஹெல்த்கேர்: நம்பிக்கை தரும் விரிவாக்க திட்டங்கள்
மேக்ஸ் ஹெல்த்கேர்: நம்பிக்கை தரும் விரிவாக்க திட்டங்கள்
ADDED : ஏப் 26, 2026 01:25 AM

இந்தியாவின் சுகாதாரத் துறையில் மூன்றாவது பெரிய மருத்துவ குழுமமாக 'மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்ட்டிடியூட்' திகழ்கிறது. குறிப்பாக, வட இந்தியாவில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதய சிகிச்சை, புற்றுநோயியல், சிறுநீரக அறிவியல், நரம்பியல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற உயர்நிலை மருத்துவ சேவைகளில் இந்நிறுவனம் முன்னோடியாக உள்ளது.
தற்போது, மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் கிட்டத்தட்ட 5,000 படுக்கை வசதிகளுடன்; 22 மருத்துவமனைகளை இயக்கி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நிறுவனத்தின் மொத்த படுக்கை வசதியில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை, டெல்லி என்.சி.ஆர்., மற்றும் மும்பை போன்ற பகுதிகளில் அமைந்துள்ளது தான்.
துறை சார்ந்த முக்கிய அளவீடுகளில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, ஒரு படுக்கைக்கு 78,000 ரூபாய்க்கும் அதிகமான வருவாயை பெறுகிறது. 75 சதவீதத்திற்கும் அதிகமான படுக்கை பயன்பாட்டு விகிதத்தை பெற்று, இத்துறையில் முன்னணியில் உள்ளது.
வருவாய் ஆதாரங்கள் கடந்த 2021 முதல் 2025 வரையிலான நிதியாண்டு காலத்தில், நிறுவனத்தின் விற்பனை, 29 சதவீத ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தை கண்டுள்ளது. இதன்வாயிலாக, வருவாய் 2,400 கோடி ரூபாயில் இருந்து 6,850 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
லக்னோவில், 'சஹாரா மருத்துவமனை' மற்றும் நொய்டாவின், 'ஜே.பி., மருத்துவமனை' ஆகியவற்றை வாங்கியதன் வாயிலாக, படுக்கைகளின் எண்ணிக்கை 5,150 ஆக உயர்ந்தது.
காப்பீடு, நேரடி பணம் செலுத்துதல் மற்றும் சர்வதேச நோயாளிகளுக்கான சிகிச்சை ஆகியவற்றின் வாயிலாக கிடைக்கும் வருவாய், 81 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருவாயில், 25 சதவீதம் புற்றுநோய் சிகிச்சையிலிருந்து கிடைக்கிறது. இத்துறை, 2020 முதல் ஆண்டுக்கு சராசரியாக 38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இவையே இந்நிறுவனத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணங்களாக அமைந்துள்ளன.
சர்வதேச சேவைகள் இந்நிறுவனம் இந்தியாவில் மட்டுமின்றி, கென்யா, நைஜீரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக் உள்ளிட்ட பல நாடுகளில், நோயாளிகளுக்கான உதவி மையங்களை அமைத்து, சர்வதேச நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறது.
மேக்ஸ் லேப் மருத்துவமனைக்கு வெளியேயான சேவைகளை வழங்க, 'மேக்ஸ் லேப்' வாயிலாக 60க்கும் மேற்பட்ட நகரங்களில், 580 ரத்த சேகரிப்பு மையங்களையும், 47 தலைமை ஆய்வகங்களையும் இயக்கி வருகிறது. இதன்வாயிலாக, இதுவரை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்து உள்ளனர்.
லாப வரம்பு நிறுவனத்தின் வரி, வட்டி, தேய்மானத்துக்கு முந்தைய லாபம், 380 கோடியிலிருந்து 1,100 கோடியாக (19% வளர்ச்சி) உயர்ந்துள்ளது. லாப வரம்பு 15 சதவீதத்திலிருந்து 26.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு, 'ஆப்ரேட்டிங் லீவரேஜ்' ஒரு முக்கிய காரணம். அதாவது, வருவாய் அதிகரிக்கும்போது நிலையான செலவுகள் குறைவதால் லாபம் நேரடியாக அதிகரிக்கிறது. குறிப்பாக, 'பிரவுன்பீல்டு' விரிவாக்கங்கள் வாயிலாக தொடங்கப்பட்ட புதிய மருத்துவமனைகள் மிக விரைவாக லாப நிலையை எட்டியுள்ளன.
விரிவாக்க திட்டங்கள் மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம், வரும் 2030க்குள் தனது படுக்கை வசதியை 10,000க்கும் மேலாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் 5 ஆண்டுகளில், 5,300 புதிய படுக்கைகளை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
இதில், 59 சதவீத படுக்கைகள் ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதாலும், மீதமுள்ளவை புதிய திட்டங்கள் வாயிலாகவும் உருவாக்கப்படும்.
டெல்லி, குருகிராம், மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் இந்த விரிவாக்கங்கள் அதிகளவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
காலாண்டு முடிவுகள் கடந்த 2025 - 26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், வருவாய் மற்றும் எபிட்டாவில், முறையே 3 சதவீதம் மற்றும் 7 சதவீதம் சரிவு ஏற்பட்டது. காப்பீடு செய்த நோயாளிகளின் எண்ணிக்கை தற்காலிகமாக குறைந்ததே இதற்கு காரணம். இருப்பினும், தற்போது மீண்டும் நான்கு முக்கிய காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், இந்த நிலை விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் நிர்வாகத்திறன் மிகவும் சிறப்பாக உள்ளதோடு, சிறந்த செயல்பாட்டு திறனை கொண்டுள்ளது. இதனை வணிகத்தின் லாப விகிதங்கள் மற்றும் லாப வரம்புகள் வாயிலாக அறியலாம். மேலும், 5,000க்கும் மேற்பட்ட படுக்கைகளை சேர்க்கும் இவர்களுடைய பெரிய விரிவாக்க திட்டம், வரவிருக்கும் 5 ஆண்டுகளில் ஒரு சிறப்பான வருவாய் வளர்ச்சிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது. கிட்டத்தட்ட 60 சதவீத படுக்கைகள், 'பிரவுன்பீல்டு' முறையில் அமைக்கப்படுவதால், மற்ற மருத்துவமனை குழுமங்களுடன் ஒப்பிடுகையில், வருவாயை வேகமான விகிதத்தில் வளர்ப்பதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது.
புதிய மருத்துவமனைகள் துவங்கப்பட உள்ளதால், எபிட்டா வளர்ச்சி சற்று குறையக்கூடும்; லாப வரம்புகள் 20-21 சதவீதம் என்ற அளவில் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த தாக்கம் கடந்த காலத்தை போல அதிகமாக இருக்காது.
தற்போதைய நிலவரப்படி, இந்த நிறுவனம் அதன் எபிட்டா லாபத்தை போல 48 மடங்கு விலையில் வர்த்தகமாகிறது. நிறுவனத்தின் நிர்வாக திறன் மற்றும் விரிவாக்க திட்டங்கள் வருங்கால வருவாய்க்கு வலுவான உத்தரவாதத்தை அளித்தாலும், பங்கின் விலை அதன் உண்மையான மதிப்பை விட சற்று அதிகமாகவே உள்ளது.
பொறுப்பு துறப்பு இந்த அறிக்கை, முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
