தேசிய பங்கு சந்தை பங்கு வெளியீட்டுக்கு செபி பச்சைக்கொடி
தேசிய பங்கு சந்தை பங்கு வெளியீட்டுக்கு செபி பச்சைக்கொடி
ADDED : செப் 05, 2026 02:54 AM

இ ந்திய பங்கு சந்தையின் மிகப்பெரிய பொது பங்கு வெளியீடுகளில் ஒன்றாக கருதப்படும் 'நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' நிறுவனத்தின் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐ.பி.ஓ.,வுக்கு செபி இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஐ.பி.ஓ.,வின் மதிப்பு கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, இந்தியாவின் மிகப்பெரிய ஐ.பி.ஓ., என்ற சாதனையை என்.எஸ்.இ., பெறுகிறது. இந்த வெளியீட்டின் வாயிலாக என்.எஸ்.இ.,யின் மொத்த சந்தை மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது முழுமையாக ஆபர் பார் சேல் முறையில் நடைபெறுகிறது. அதாவது, நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்கள் தங்கள் கைவசம் உள்ள 14.89 கோடி பங்குகளை ( 6% பங்கு) விற்பனை செய்கின்றனர்.
'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' அதிகபட்சமாக 2.48 கோடி பங்குகளையும், 'எம்.எஸ் ஸ்ட்ராட்டஜிக்' (மொரீஷியஸ்) நிறுவனம் 1.60 கோடி பங்குகளையும் விற்பனை செய்கின்றன.
கோ - லொகேஷன் முறைகேடு உள்ளிட்ட ஒழுங்குமுறை சிக்கல்கள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக தள்ளிப்போன என்.எஸ்.இ.,யின் பங்கு வெளியீடு தற்போது சாத்தியமாகியுள்ளது. இதனிடையே, என்.எஸ்.இ.,யின் ஐ.பி.ஓ., செப்டம்பர் 21 அல்லது 25ம் தேதிகளில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
