வங்கிகளுக்கு புதிய காப்பீட்டு முறை: முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பலன்
வங்கிகளுக்கு புதிய காப்பீட்டு முறை: முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பலன்
ADDED : டிச 20, 2025 01:57 AM

வங்கிகள் எதிர்கொள்ளும் ரிஸ்க் அடிப்படையிலான டிபாசிட் காப்பீட்டு முறையை செயல்படுத்த, ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடந்த கூட்டத்தில், வங்கிகளுக்கான புதிய காப்பீட்டு முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள முறையில், எல்லா வங்கிகளும் டிபாசிட் காப்பீடுக்காக ஒரே அளவிலான கட்டணத்தையே செலுத்துகின்றன. ஆனால், புதிய நடைமுறையில், அதிக ரிஸ்க் எடுக்கும் வங்கி, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
வலுவான நிதிநிலை கொண்ட வங்கிகளுக்கு ரிஸ்க் குறைவாக இருப்பதால், குறைந்த பிரீமியத்தை செலுத்தினால் போதும். இதனால், அந்த வங்கியின் லாபம் அதிகரிக்கும்.
வங்கிகள் தங்களின் ரிஸ்க் அளவை குறைக்க முயற்சிக்கும். ஏனெனில், ரிஸ்க் குறைந்தால் அவர்கள் செலுத்தும் காப்பீடு கட்டணமும் குறையும். இது ஒட்டுமொத்த வங்கித் துறைக்கும் சாதகமாக இருக்கும்.
என்ன பயன்?
அதிக பாதுகாப்பு: வங்கிகள் தங்களின் நிதி நிலையை சரியாக பராமரிக்காமல் விட்டால், அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், அவை மிகவும் பொறுப்புடன் செயல்படும். இதனால், வாடிக்கையாளர்கள் பணம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.
வெளிப்படைத்தன்மை: எந்த வங்கி அதிக கட்டணம் செலுத்துகிறது என்பதை வைத்து, அந்த வங்கியின் ஆரோக்கியத்தை முதலீட்டாளர்கள் ஓரளவு கணிக்க முடியும்.
உத்தரவாதம்: வங்கி திவாலானால், ஒரு நபருக்கு 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்ற தற்போதைய உத்தரவாதம் இன்னும் வலுப்படும்.

