ADDED : அக் 01, 2025 01:14 AM

முதலீட்டு டிப்ஸ் வழங்குவதாகவும், உத்தரவாதமான வருவாய் ஈட்டித் தருவதாகவும் சொல்லி, ஏமாற்றும் அங்கீகாரமற்ற போலி நிறுவனங்கள், தனிநபர்களைப் பற்றி உஷார் படுத்தியுள்ளது என்.எஸ்.சி., எனும் தேசிய பங்குச் சந்தை.
இந்த நபர்களும் நிறுவனங்களும், வாடிக்கையாளர்களின் பங்கு வர்த்தக கணக்கையே நிர்வகிக்கும் சேவையை வழங்குவதுடன், சட்டத்துக்கு புறம்பான பங்கு வர்த்தகத்திலும் ஈடுபடுவதாக என்.எஸ்.சி. கூறியுள்ளது.
'ஷேர்ஸ்பஜார்' என்ற நிறுவனம், பல மொபைல் எண்கள், ஒரு இணையதளம், ஒரு மொபைல் செயலி, பல்வேறு சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
இது உத்தரவாதமான வருவாய் ஈட்டித் தருவதாக விளம்பரம் செய்வதோடு, பல்வேறு சட்டப்புறம்பான டிரேடிங் சேவைகளையும் வழங்கி வருகிறது என்றும்; 'டிரேட் வால்கானோ, நைஸ்டிரேடர், நுஸா டிரேடிங் ஸ்கூல்' ஆகிய நிறுவனங்களை சேர்ந்த தனிநபர்கள் சிலரும் இப்படி இயங்கி வருவதாகவும் எச்சரித்துள்ளது.
“இந்த நிறுவனங்களும் தனிநபர்களும், பங்குச் சந்தையில் பதிவுபெற்ற உறுப்பினர்கள் இல்லை.
அல்லது என்.எஸ்.சி.,யில் பதிவுபெற்ற உறுப்பினரின் சான்றுபெற்ற நபர்களும் அல்ல. இவர்களிடம் சிறு முதலீட்டாளர்கள் மாட்டிக்கொள்ள வேண்டாம்” என்று உஷார்படுத்தியுள்ளது. இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டால், அது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும் என தெரிவித்துள்ளது.