முடிவுக்கு வருகிறது என்.எஸ்.இ.,யின் வழக்குகள் சீராகும் ஐ.பி.ஓ., பாதை
முடிவுக்கு வருகிறது என்.எஸ்.இ.,யின் வழக்குகள் சீராகும் ஐ.பி.ஓ., பாதை
ADDED : ஆக 01, 2026 02:28 AM

எ ன்.எஸ்.இ., மீது நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 'கோ - லொகேஷன் மற்றும் டார்க் பைபர்' வழக்குகளை, 1,491.21 கோடி ரூபாய் சமரச தொகை பெற்று முடித்துக்கொள்ள செபி ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்த ஒப்புதலை, ஜூலை 30ம் தேதி தேசிய பங்கு சந்தைக்கு செபி தெரிவித்துள்ளது.
மொத்த சமரச தொகையில், கோ - லொகேஷன் வழக்குக்கு 1,223.56 கோடி ரூபாயும், டார்க் பைபர் வழக்குக்கு 267.65 கோடி ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக என்.எஸ்.இ., தெரிவித்துள்ளதாவது:
ஏற்கனவே செபியிடம் 776.47 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 714.74 கோடி ரூபாயை செலுத்துமாறு செபி கோரியுள்ளது. அந்த தொகை செலுத்தப்பட்டதும் சமரச நடைமுறை நிறைவடையும்.
இந்த சமரசத்தால், இரு தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீடுகளை திரும்ப பெற உள்ளன. இதன் வாயிலாக, என்.எஸ்.இ.,யின் நீண்ட நாள் ஐ.பி.ஓ., திட்டத்திற்கு இருந்த முக்கிய ஒழுங்குமுறை தடை நீங்கியுள்ளதால், விரைவில் செபியின் இறுதி ஒப்புதல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
