PUBLISHED ON : மே 29, 2026 12:00 AM

மே 29: நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் அருகில் உள்ள வீராக்கண் என்ற ஊரில், பஞ்சநாத முதலியார் - பார்வதி அம்மாள் தம்பதியின் மகனாக, 1923ல் இதே நாளில் பிறந்தவர், தருமபுரம் ப.சுவாமிநாதன்.
பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். அக்காலத்து திரைப்பட பாடல்களை இவர் அழகாக பாடுவதை கேட்ட திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபர் அருள்நந்தி தம்பிரான், தருமபுர ஆதீன மடத்தில் தேவாரம் கற்க அனுப்பினார்.
அங்கு பணிபுரிந்தபடியே, தேவார தமிழிசை பள்ளி ஓதுவார் ஆர்.வேலாயுதத்திடம் தேவாரம் கற்று, 'தேவார இசைமணி' பட்டம் பெற்றார். பின், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை இசை கல்லுாரியின் சித்துார் சுப்பிரமணிய பிள்ளையின் வழிகாட்டுதலில், 'சங்கீத பூஷணம்' பட்டம் பெற்றார்.
தொடர்ந்து, தேவார இசையை உலகெங்கும் பரப்பினார். 10,325 பன்னிரு திருமுறை பாடல்களை பாடியுள்ளார். சென்னை குன்றத்துார் சேக்கிழார் கோவிலுக்கு மூன்று முறை குடமுழுக்கு நடத்தினார்.
'கலைமாமணி, இசை பேரறிஞர்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 86வது வயதில், 2009, அக்டோபர் 15ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
