ஃ பண்டமென்டல் அனாலிசிஸ் இலக்குகளை எட்டுவதற்கு தவிக்கும் ஓ.என்.ஜி.சி.,
ஃ பண்டமென்டல் அனாலிசிஸ் இலக்குகளை எட்டுவதற்கு தவிக்கும் ஓ.என்.ஜி.சி.,
UPDATED : ஜூன் 14, 2026 01:50 AM
ADDED : ஜூன் 14, 2026 01:48 AM

கடந்த 1956ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஓ.என்.ஜி.சி., நிறுவனம், இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் 71 சதவீதத்துக்கும் அதிகமாகவும், இயற்கை எரிவாயுவில் பாதியளவும் உற்பத்தி செய்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பரப்பளவிலான எண்ணெய் கிணறுகளை கண்டறியும் உரிமையை கொண்டுள்ள இந்நிறுவனம், 15 வண்டல்மண் படுகைகளில் இயங்கி வருவதுடன், கிட்டத்தட்ட 52.60 கோடி டன் எண்ணெய் இருப்பு ஆதாரங்களையும் கொண்டுள்ளது.
![]() |
உற்பத்தி சரிவு
இவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தபோதிலும், தற்போது ஒரு கடுமையான சவாலை எதிர்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் மிக முக்கியமான சொத்துகளாக கருதப்படும் மும்பை ஹை, பசீன், அங்க்லேஷ்வர் மற்றும் அகமதாபாத் ஆகிய எண்ணெய் வயல்கள் அனைத்தும் முதிர்ச்சியடைந்துவிட்டதால், ஆண்டுக்கு 6 முதல் 8 சதவீதம் வரை இயற்கையாகவே சரிவை சந்தித்து வருகின்றன.
இதன் காரணமாக, இந்நிறுவனம் கடந்த ஏழு ஆண்டுகளாக தனது உற்பத்தி இலக்குகளை எட்ட தவறியதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டு மொத்த உற்பத்தி, ஆண்டுக்கு 3.20 சதவீத ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தில் சுருங்கியுள்ளது.
இயற்கை வள சரிவு என்னும் சவாலை முறியடித்து ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தால் மீண்டும் இலக்குகளை எட்ட முடியுமா என்பதே தற்போதைய கேள்வியாக உருவெடுத்து உள்ளது.
சாதகமான கொள்கைகள்
வரி நீக்கம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போதெல்லாம், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் லாபத்தை முடக்கி வந்த 'விண்ட்பால் வரி' எனப்படும் சிறப்பு கூடுதல் கலால் வரியை, கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் மத்திய அரசு முற்றிலுமாக நீக்கியது.
உரிமைத்தொகை குறைப்பு: சமீபத்தில் உள்நாட்டு எண்ணெய் வயல்களுக்கான உரிமைத்தொகை (ராயல்டி) 12.50 சதவீதமாகவும்; கடல்சார் எண்ணெய் வயல்களுக்கான உரிமைத்தொகை 10 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த நடவடிக்கை மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிவாயு விலை நிர்ணயம்: புதிய கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் எரிவாயுக்கு 20 சதவீத கூடுதல் பிரீமியம் வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலான பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் எரிவாயுக்கு, இந்திய கச்சா எண்ணெய் தொகுப்பு விலையோடு இணைக்கப்பட்ட சந்தை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக, கடந்த 2025 - 26 நிதியாண்டில் மட்டும் கூடுதலாக 1,000 கோடி ரூபாய்க்கும் அதிக வருவாய் கிடைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் புதிய கிணறுகளின் எரிவாயு விற்பனை பங்கு 24 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கூட்டணி
பிரிட்டனை சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலியத்துக்கு 10 ஆண்டுகால ஒப்பந்தத்தை ஓ.என்.ஜி.சி., வழங்கியுள்ளது. முதிர்ச்சியடைந்த வயல்களில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை 10.80 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தியை 31.50 சதவீதமும் உயர்த்துவதே இதன் இலக்காகும்.
ஆரம்பகட்ட அறிகுறியாக, மும்பை ஹை வயலின் உற்பத்தி, அடிப்படை அளவை விட 7 சதவீதம் அதிகமாக உள்ளது.
இருப்பினும், வங்காள விரிகுடாவில் உள்ள முதன்மையான ஆழ்கடல் திட்டமான கே.ஜி.,- டி.டபிள்யூ.என்.,-98/2 தற்போது பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.'ஓபெல்' நிறுவனத்தில் செய்யப்பட்ட பெரும் முதலீடுகளுக்கு ஏற்ற லாபமும் இதுவரை கிடைக்கவில்லை.
எதிர்கால வளர்ச்சி
உற்பத்தி அதிகரிப்பு: கே.ஜி-98/2, தாமன் அப்சைடு மேம்பாட்டு திட்டம் மற்றும் டி.எஸ்.எப்., - 2 எண்ணெய் வயல் ஆகிய திட்டங்கள் ஒருங்கிணைந்து, பிரீமியம் விலையிலான எரிவாயு உற்பத்தியை மேலும் 1 கோடி மெட்ரிக் நிலையானகன மீட்டர் அளவுக்கு உயர்த்தக்கூடும்.
சர்வதேச முதலீடுகள்: மொசாம்பிக் எல்.என்.ஜி., திட்டத்தில் தற்காலிக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் 2027 - 28நிதியாண்டு முதல் வினியோகம் தொடங்கும்.வெனிசுலா நாட்டின் மீதான அமெரிக்க தடைகள் தளர்த்தப்படுவது அங்கு முடங்கியுள்ள கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் ஈவுத்தொகையை மீட்டெடுக்க உதவும்.
ரஷ்யாவின் சாகலின் திட்டத்தின் வாயிலான லாபத்தின் ஒரு பகுதியை நடப்பாண்டில் கொண்டுவர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உட்கட்டமைப்பு பகிர்வு: 'எண்ணெய் வயல்கள் திருத்த சட்டம் 2025'ன் உதவியோடு ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆழ்கடல் உள்கட்டமைப்பு பகிர்வு ஒப்பந்தம், ஒரு பீப்பாய் எண்ணெய்க்கான உற்பத்தி செலவை கணிசமாக குறைக்கும்.
பசுமை எரிசக்தி
வரும் 2038க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்ற இலக்கை அடைய 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஓ.என்.ஜி.சி., திட்டமிட்டுள்ளது. அதில் 1 லட்சம் கோடி ரூபாய் 2030க்குள்ளேயே முதலீடு செய்யப்படும். பி.டி.சி., எனர்ஜி மற்றும் அயனா ரினியூவபிள் பவர் ஆகிய நிறுவனங்களை கைப்பற்றியுள்ள ஓ.என்.ஜி.சி., 2030க்குள் 10 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை எட்ட உறுதியாக உள்ளது.
முதலீட்டாளர்கள் பார்வை
குறைந்த கடன், 6 முதல் 7 சதவீதம் வரையிலான ஈவுத்தொகை பலன், வலுவான வணிக ஆதிக்கம் மற்றும் காலக்கெடு தெளிவுபடுத்தப்பட்டு வரும் பிரமாண்ட திட்டங்கள் ஆகியவை நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சாதகமாக உள்ளன.
மறுபுறம், திட்டமிட்ட இலக்குகளை தவறவிடுவது, வற்றி வரும் கிணறுகள் மற்றும் வணிக முடிவுகளில் அரசின் தலையீடுகள் குறித்த அச்சம் முதலீட்டாளர்களை தயங்க வைக்கிறது.
பொறுப்பு துறப்பு
இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

