ADDED : டிச 19, 2025 01:47 AM

தங்கம் மற்றும் வெள்ளியை தொடர்ந்து, தற்போது பிளாட்டினம் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் பிளாட்டினம் ஒரு அவுன்ஸ் 1,975 டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும்.
நடப்பாண்டில் மட்டும் பிளாட்டினம் விலை கிட்டதட்ட 115 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தங்கத்தின் விலையேற்றத்தை விட 65 சதவீதம் அதிகம் என தரவுகள் கூறுகின்றன.
சென்னையில் ஒரு கிராம் பிளாட்டினம் 6,000 முதல் 6,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரூபாய் மற்றும் இதர சில நாடுகளின் கரன்சி மதிப்பு சரிந்து வருவதால், பாதுகாப்பான முதலீட்டாக, தங்கம் மற்றும் வெள்ளியை அடுத்து பிளாட்டினம் இருப்பதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
கார்களில் புகையை குறைக்க பயன்படும் 'கேடலிடிக் கன்வெர்ட்டர்' தவிர, தற்போது ஹைட்ரஜன் எரிசக்தி மற்றும் பசுமை ஆற்றல் துறைகளிலும் பிளாட்டினத்தின் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலகளவில் பிளாட்டினம் உற்பத்தியில் 70 - 75 சதவீதம் வரை பங்களிக்கும் தென்னாப்ரிக்காவில் உற்பத்தி குறைந்துள்ளது. அதேபோல், போர் மற்றும் அரசியல் சூழல்களால் ரஷ்யாவிலும் பிளாட்டினம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, தட்டுப்பாடு நிலவுவதாக, உலக பிளாட்டினம் முதலீட்டு கவுன்சில் கணித்துள்ளது.
தொழில் துறையில் தேவை அதிகரிப்பு ஒருபுறம் என்றால், உற்பத்தி குறைவு காரணமாக பிளாட்டினம் விலை ஏற துவங்கியுள்ளது. இதன் காரணமாக, சீனாவின் குவாங்சோ சந்தையில், பிளாட்டினம் வர்த்தகம் துவங்கிய சில நாட்களிலேயே, அதன் மீதான முதலீடு 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் நாட்களில், தங்கம், வெள்ளி விலைக்கு இணையாக பிளாட்டினம் விலையும் கணிசமாக உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

