
ரூ.3,000 கோடி கடன் பத்திரங்கள்
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழு, 3,000 கோடி ரூபாய் மதிப்பில் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட அனுமதி வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக கடன் பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன.
இந்த கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம், கடன் காலம் மற்றும் திருப்பி செலுத்த வேண்டிய முறை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரட்டப்படும் தொகையை நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்கள், பிற பொது தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பி.என்.பி., பண்டிகை கால சலுகை
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க், பண்டிகை காலத்தை முன்னிட்டு அதன் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. பி.என்.பி., அறிவிப்பின் படி, 25,000 ரூபாய் வரையிலான சாம்சங், டெல், சோனி, ரியல்மி உள்ளிட்ட பிராண்டு மொபைல் மற்றும் பிற மின்னணு பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். உள்நாட்டு விமான பயணங்களுக்கு அதிகபட்சமாக 1,800 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.
சர்வதேச விமான பயணங்களுக்கு 7,500 ரூபாய் வரையிலும்; குறிப்பிட்ட சில இ - காமர்ஸ் தளங்களில் 1,250 ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படும்.