தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் உதவியால் ரூ.45 கோடி ரீபண்டு
தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் உதவியால் ரூ.45 கோடி ரீபண்டு
ADDED : டிச 28, 2025 01:17 AM

தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் வாயிலாக, நடப்பாண்டில் 45 கோடி ரூபாய் ரீபண்டு பெற்று தரப்பட்டுள்ளது. இவ்வாண்டு, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 67,265 நுகர்வோர் அளித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் கூறியிருப்பதாவது:
நுகர்வோர் குறைதீர்ப்புக்கான தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனால், 2025ல் பெறப்பட்ட புகார்களில், 40,000 புகார்கள் இ - காமர்ஸ் துறை சம்பந்தப்பட்டவை ஆகும். இதில் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு, மொத்தம் 32 கோடி ரூபாய் ரீபண்டு பெற்றுத் தரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தொகையில் மூன்றில் இரண்டு பங்கு தொகை இந்தத் துறை சார்ந்தது.
இதற்கு அடுத்தபடியாக, பயணம் மற்றும் சுற்றுலா துறை தொடர்பான புகார்களுக்கு 3.5 கோடி ரூபாய் ரீபண்டு பெற்றுத் தரப்பட்டு உள்ளது. இவை தவிர, ஏெஜன்சி சேவைகள், எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள், விமான போக்குவரத்து துறை சார்ந்த புகார்களும் அதிகம் வந்துள்ளன. இவ்வாண்டில் ஒட்டுமொத்த ரீபண்டு தொகையில் 85 சதவீத பங்கு, மேலே சொன்ன ஐந்து துறைகளை சார்ந்ததாகும்.
எந்த ஒரு நுகர்வோரும், தாங்கள் செலுத்திய பணத்துக்கான சேவை கிடைக்காதபோது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019ன் கீழ் நுகர்வோர் ஆணையங்களில் புகார் செய்ய முடியும்.
அதற்கு பதிலாக, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தி, நுகர்வோர் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டாலே, நுகர்வோர் பாதுகாப்பு துறை தலையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் பெற்றுத் தருகிறது.
பெருநகரங்கள் மட்டுமின்றி, சிறிய கிராமங்களிலிருந்தும் நுகர்வோர் புகார்கள் பெறப்பட்டு, உரிய தீர்வு பெற்றுத் தரப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நுகர்வோர் சேவை குறைபாடா?
* 1915 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் அழைக்கலாம்
* தமிழ் உட்பட 17 மொழிகளில் புகார் செய்யலாம்
* 88000 01915 என்ற எண்ணுக்கு வாட்ஸாப் / எஸ்.எம்.எஸ்., புகார் கொடுக்கலாம்
* https://consumerhelpline.gov.in/public/ என்ற இணையதளத்தையும் பயன்படுத்தலாம்
* என்.சி.ஹெச்., உமாங் செயலிகளையும் பயன்படுத்த முடியும்.

