ADDED : நவ 27, 2025 01:16 AM

நே ற்று, ரூபாய் மதிப்பு முந்தைய நாள் வர்த்தக முடிவைவிட சற்று பலவீனமாகவே நிறைவானது. ரிசர்வ் வங்கியின் தொடர்ச்சியான தலையீடு காரணமாக, வாரத்தை திடமான நிலையில் தொடங்கிய ரூபாய், மாத இறுதியில், இறக்குமதியாளர்களின் டாலர் தேவையால் மீண்டும் அழுத்தத்திற்கு உள்ளானது.
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்தபோது, ரிசர்வ் வங்கி தலையிட்டு, மதிப்பு மேலும் வீழ்ச்சியடையாமல், 89 ரூபாய் என்ற நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்தது.
இருப்பினும், இறக்குமதியாளர்கள் அதிகமாக டாலரை வாங்குவதன் காரணமாக, ரூபாய் மதிப்பு மீண்டும் 89.26-89.30 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இது, டாலருக்கான தேவை இன்னும் வலுவாக இருப்பதை உணர்த்துகிறது.
உள்நாட்டு அழுத்தங்கள் இருந்தாலும், உலகளாவிய காரணிகள் தற்போது ரூபாய்க்கு சாதகமாக திரும்ப தொடங்கியுள்ளன. கச்சா எண்ணெய் விலை குறைவது, இந்தியாவின் இறக்குமதி செலவுகள் குறைய வழிவகுக்கும். இது வர்த்தக பற்றாக்குறை குறைய வழிவகுத்துள்ளது.
அமெரிக்காவில் வெளியான பலவீனமான பொருளாதாரத் தரவுகள் காரணமாக, டாலர் குறியீடு 0.5 சதவீதம் சரிந்து, 99.602 ஆகக் குறைந்தது. அந்நாட்டு பெடரல் வங்கி அதிகாரிகள், வட்டி விகிதக் குறைப்பு குறித்த சாதகமான கருத்துகளை தெரிவித்ததையடுத்து, டிசம்பரில் வட்டி விகிதக் குறைப்பிற்கான வாய்ப்பு 83% ஆக அதிகரித்துள்ளது. பொதுவாக டாலர் பலவீனமடைந்தால், அது வளர்ந்து வரும் சந்தை நாணயங்களை ஆதரிக்கும்.
ரூபாய் மதிப்பு பெரும்பாலும் 88.90-89.80 என்ற பரந்த வரம்பிற்குள் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 88.80-89.00 என்பது வலுவான ஆதரவு நிலையாக இருக்கிறது.

