தவறான நிதி தகவல்கள் பரவுவதை கட்டுப்படுத்த செபிக்கு புதிய அதிகாரம்
தவறான நிதி தகவல்கள் பரவுவதை கட்டுப்படுத்த செபிக்கு புதிய அதிகாரம்
ADDED : டிச 11, 2025 02:06 AM

ச மூக ஊடகங்களில் பரவும் தவறான அல்லது மக்களை ஏமாற்றும், பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை நீக்க, செபிக்கு, மத்திய நிதியமைச்சகம் அதிகாரத்தை வழங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ், செபியை இதற்கான 'அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவும்' அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 மற்றும் அதன் விதிகள் 2021 ஆகியவற்றின் கீழ், செபிக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆலோசகர்களுக்கான முறையான அங்கீகாரம் பெறாத 'பின்புளூயன்ஸர்கள்' அதிகரிப்பு மற்றும் அவர்கள் சொல்லும் சரிபார்க்கப்படாத தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில், இந்த கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, செபியின் உத்தரவின்பேரில், சமூக ஊடக தளங்களில், தவறான நிதி ஆலோசனை, முறைப்படுத்தப்படாத முதலீட்டுத் தகவல், மோசடியான வர்த்தக திட்டங்கள் அல்லது பங்குச் சந்தையை பாதிக்கக்கூடிய தவறான தகவல்கள் போன்றவற்றை நீக்கிவிட முடியும்.
பங்குச் சந்தைகள் தொடர்பான தவறான வழிகாட்டுதல்கள் டிஜிட்டல் உலகில் பரவுவதை கட்டுப்படுத்தவும், முதலீட்டாளர்களின் நலன் காக்கவும், இந்த நடவடிக்கை உதவும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

