சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த செபியின் 2 புதிய தளங்கள் அறிமுகம்
சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த செபியின் 2 புதிய தளங்கள் அறிமுகம்
ADDED : ஆக 20, 2026 02:03 AM

ப ங்கு சந்தை சார்ந்த நிறுவனங்களில் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், 'இன்சிடென்ட் ரிப்போர்ட்டிங் போர்டல்' மற்றும் 'சைபர் சுரக் ஷா போர்டல்' ஆகிய 2 புதிய தளங்களை செபி அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்சிடென்ட் ரிப்போர்ட்டிங் போர்டல் வாயிலாக சந்தை நிறுவனங்கள், சைபர் பாதுகாப்பு சம்பவங்களை விரைவாகவும், ஒரே மாதிரியான முறையிலும் செபியிடம் தெரிவிக்க முடியும். இது நிதி ஸ்திரத்தன்மை வாரியத்தின் (எப்.எஸ்.பி.,) அறிக்கை முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சைபர் சுரக் ஷா போர்டல் வாயிலாக சைபர் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு குறைபாடுகள், கொள்கை நடவடிக்கைகள் மற்றும் சைபர் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் மைய தளமாக செயல்படும்.
சைபர் தாக்குதல்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து அதன் தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள், மூன்றாம் தரப்பினர் அல்லது தொடர்புடைய நிறுவனங்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதால், தனிப்பட்ட நிறுவனத்தின் பாதுகாப்பை மட்டுமின்றி, முழு சந்தை அமைப்பின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியம் என செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும், செயற்கை நுண்ணறிவால் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு குறைபாடுகளை தொடர்ந்து கண்டறிந்து சரிசெய்வதிலும் செபி கவனம் செலுத்துகிறது. குவான்டம் கம்ப்யூட்டிங் வாயிலாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
