பதிவு செய்யாத முதலீட்டு ஆலோசகரின் ரூ.546 கோடியை முடக்க செபி உத்தரவு
பதிவு செய்யாத முதலீட்டு ஆலோசகரின் ரூ.546 கோடியை முடக்க செபி உத்தரவு
UPDATED : டிச 06, 2025 01:11 AM
ADDED : டிச 06, 2025 01:10 AM

பங்குச் சந்தை பயிற்சியாளரான 'அவதுாத் சாத்தே' மற்றும் அவரது 'அவதுாத் சாத்தே டிரேடிங் அகாடமி பிரைவேட் லிமிடெட்' ஆகியோருக்கு எதிராக, செபி ஓர் அதிரடி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
பங்குச் சந்தை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூறி, செபியில் பதிவு பெறாமல், பங்கு பரிந்துரை உள்ளிட்ட ஆலோசனை சேவைகளை சாத்தே வழங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டவிரோதமாக லாபம் ஈட்டியதாக கண்டறியப்பட்ட 546.16 கோடி ரூபாயை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2008ல் டிரெய்னிங் அகாடமியை துவக்கி, பயிற்சி வகுப்புகள் எடுக்கத் துவங்கி இருக்கிறார். இதற்கு கிடைத்த வரவேற்பை வைத்து 17 மையங்களை ஆரம்பித்து பயிற்சி கொடுத்திருக்கிறார்.
கோடிகளில் வசூல்
* மூன்று மாத பயிற்சி பெற வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூபாய் 21,000 - 1.70 லட்சம் வரை
* சிறப்பு வாட்ஸாப் குழுக்கள் வாயிலாக பரிந்துரைகள் பெறுவதற்கு 6.75 லட்சம் ரூபாய்
* 3.37 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து 601.37 கோடி ரூபாய் வசூல்
* இப்படி ஈட்டிய 546.16 கோடி ரூபாய் லாபம் சட்டவிரோதமானது என அறிவிப்பு.
செபியின் இந்த உத்தரவை அடுத்து அவதுாத் சாத்தே தரப்பில், தவறு எதுவும் செய்யவில்லை என்றும், இக்குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

