டிமேட், மியூச்சுவல் பண்டுகளுக்கு புதிய நாமினேஷன் விதிமுறைகள் செபியின் புதிய உத்தரவு
டிமேட், மியூச்சுவல் பண்டுகளுக்கு புதிய நாமினேஷன் விதிமுறைகள் செபியின் புதிய உத்தரவு
ADDED : மே 30, 2026 12:27 AM

செபி, பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் வசதிக்காகவும், உரிமை கோரப்படாத சொத்துக்களை குறைப்பதற்காகவும், டிமேட் மற்றும் மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கான நாமினேஷன் விதிமுறைகளை எளிதாக்கியுள்ளது. இந்த புதிய உத்தரவு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
என்னென்ன மாற்றங்கள்? செப்டம்பர் 1ம் தேதிக்கு பின் தனி நபர் பெயரில் தொடங்கும் புதிய டிமேட் அல்லது மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கு, நாமினேஷன் செய்வதோ அல்லது 'நாமினி வேண்டாம்' என்ற டிக்ளரேஷன் படிவத்தை அளிப்பதோ கட்டாயம்
வழக்கமான கையெழுத்திடும் முதலீட்டாளர்களுக்கு, நாமினேஷன் படிவத்தில் சாட்சி கையெழுத்து தேவையில்லை; ஆனால் பெருவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இரு நபர்களின் சாட்சி கையெழுத்து தேவைப்படும்
* ஒரு கணக்கிற்கு அதிகபட்சமாக 3 நாமினி கள் வரை நியமிக்கலாம்; முதலீட்டாளர் மறைவிற்கு பின் அவர்கள் அதே கணக்கை தொடரலாம்; அல்லது, தங்களின் பங்குகளுக்கு ஏற்ப தனித்தனி கணக்குகளாக பிரித்துக் கொள்ளலாம்
* ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளுக்கான பங்கு சதவீதத்தை குறிப்பிடாத போது, சொத்துக்கள் சமமாக பிரித்து வழங்கப்படும்
* நாமினேஷன் படிவத்தில் நாமினியின் பெயர், உறவுமுறை ஆகிய இரண்டு மட்டுமே கட்டாய விபரங்களாகும்; நாமினி மைனராக இருந்தால் மட்டுமே அவரின் பிறந்த தேதி தேவைப்படும்
* ஆன்லைன் மூலமாக நாமினேஷன் செய்ய விரும்புபவர்கள் டிஜிட்டல் சிக்னேச்சர், ஆதார் அடிப்படையிலான இ-சைன் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல்/மின்னஞ்சலுக்கு வரும் ஒ.டி.பி., வாயிலாக செய்து முடிக்கலாம்
* முதலீட்டாளர்களின் விருப்பப்படி, அவர்களின் கணக்கு அறிக்கையில் நாமினியின் பெயர் அல்லது நாமினேஷன் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்ற விபரம் அச்சிடப்படும்
* நாமினேஷன் விவரங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றியமைக்கவோ அல்லது ரத்து செய்யவோ அனுமதி உண்டு.
