
யு.பி.ஐ., பரிவர்த்தனையால் சரியும் ஐ.எம்.பி.எஸ்.,
பணப் பரிவர்த்தனைகளில், யு.பி.ஐ., அசுர வளர்ச்சி அடைந்துள்ளதால், 'ஐ.எம்.பி.எஸ் மற்றும் ரூபே கார்டு' போன்றவற்றின் பயன்பாடு நவம்பரில் குறைந்திருப்பது தரவுகளில் தெரியவந்துள்ளது. 2023ல் 47.20 கோடியாக இருந்த ஐ.எம்.பி.எஸ்., பரிவர்த்தனைகள், தற்போது 36.80 கோடியாக சரிந்துள்ளது.
கிரெடிட் கார்டு விதிகளை மாற்றிய ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி
ஐ.சிஐ.சி.ஐ., வங்கி, தனது கிரெடிட் கார்டு கட்டணங்கள் மற்றும் சலுகைகளை, வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது. 'புக்மைஷோ' இணையதளத்தில் சலுகைகளை பெற, முந்தைய காலாண்டில் தங்கள் கிரெடிட் கார்டு வாயிலாக 25,000 ரூபாய் செலவு செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது.
இன்போசிஸ் சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடியாக உயர்வு
அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் சுமுக தீர்வு காண ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 3 சதவீத வரை உயர்ந்தன. இதன் வாயிலாக, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தாண்டியது.
வோடோபோன் பத்திரத்தில் டாடா கேபிடல் முதலீடு
'வோடபோன் ஐடியா' நிறுவனத்தின் கடன் பத்திர விற்பனையில், 'டாடா கேபிடல், ஆதித்யா பிர்லா கேபிடல் மற்றும் ஹீரோ பி கார்ப்' போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களும் சேர்ந்து 1,300 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இந்த நிதி, நிறுவனத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலையேற்றத்தால் ஹிந்துஸ்தான் ஜிங்க் உயர்வு
வெள்ளி விலை ஒரு கிலோ 2.14 லட்சம் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டதால், இந்தியாவின் முன்னணி வெள்ளி உற்பத்தியாளரான 'ஹிந்துஸ்தான் ஜிங்க்' நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரை உயர்ந்தன. ஒரே மாதத்தில் இந்நிறுவன பங்குகள், (முதலீட்டாளர்களுக்கு 25 சதவீத லாபத்தை வழங்கியுள்ளன.

