UPDATED : அக் 23, 2026 02:28 AM
ADDED : அக் 22, 2026 10:32 PM

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் சரிவை சந்தித்ததால், இந்தியாவில் வர்த்தகமாகும் வெள்ளி இ.டி.எப்.,கள் நேற்று பெரும் விற்பனை அழுத்தத்திற்கு உள்ளாகி, கிட்டத்தட்ட மூன்று சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
வட்டி விகிதங்களை அமெரிக்கா மீண்டும் உயர்த்தக்கூடும் என்ற அச்சம் வலுத்ததால், சர்வதேச சந்தையில், ஸ்பாட் வெள்ளி விலை 3.40 சதவீதம் வரை சரிந்து அவுன்ஸ் (31.100 கிராம்) ஒன்றுக்கு 56 டாலராக குறைந்தது.எம்.சி.எக்ஸ்., சந்தையில் டிசம்பர் மாத வெள்ளி பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 2.50 சதவீதம் சரிந்து கிலோ ஒன்றுக்கு 2.04 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது.
முக்கிய காரணங்கள்
மேற்கு ஆசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்ற சூழ்நிலையால், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.30 சதவீதம் உயர்ந்து 111 டாலர் என்ற நிலையை எட்டியிருப்பது
பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பது
அமெரிக்க பெடரல் வங்கி வரும் வாரம் வட்டியை உயர்த்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு
வட்டி உயர்வால் டாலர் மதிப்பும் பத்திர வட்டி விகிதங்களும் வலுவடையும் என்கிற எதிர்பார்ப்பு
வட்டி வருமானம் தராத தங்கம், வெள்ளியை விற்று முதலீட்டாளர்கள் வெறியேறி வருவது
கடனுக்கான வட்டி உயர்வு தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், தொழிற்துறை பயன்பாடு அதிகம் கொண்ட வெள்ளி கூடுதல் பாதிப்பை சந்திக்கிறது.
அதிக ஒதுக்கீடு வேண்டாம்
அதிக ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் சொத்தான வெள்ளி, தங்கத்தின் விலை சரிவை விட மும்மடங்கு வீழ்ச்சியடையும் தன்மை கொண்டது. போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வது மற்றும் அமெரிக்க வட்டி விகிதம் உயரும் என்ற அச்சமே இதற்கான முக்கிய காரணங்களாகும்.
தற்போதைய சூழலில், ஏற்கனவே உயர்ந்த விலையில் வெள்ளி முதலீடு செய்தவர்கள் பதற்றப்பட்டு இப்போது விற்காமல் இருப்பது நல்லது. புதிய முதலீட்டாளர்கள் மொத்தமாக முதலீடு செய்யாமல் விலை சரியும்போது கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி வைக்கலாம். மேலும், தொழில்துறை பயன்பாடு அதிகம் இருப்பதால், வெள்ளியின் மீது முழுமையான நம்பிக்கை வைப்பது கடினம் என்பதால், போர்ட்போலியோவில் வெள்ளிக்கான ஒதுக்கீட்டை குறைவாகவே வைத்திருப்பது புத்திசாலித்தனமாகும்.
ஆரத்தி கிருஷ்ணன்,
ஆலோசனை பிரிவு தலைவர், பிரைம் இன்வெஸ்டார் பி.எம்.எஸ்.,

